இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு ‘கத்தி கலெக்ஷன்’ எவ்வளவு என்பதைப் பற்றிய பேச்சுத்தான் சமூக வலைத்தளங்களில் இருக்கும். ஆனால், அவற்றின் உண்மையான நிலவரம் என்பது ஒரு தோராயமான மதிப்புதான்.
தமிழ் சினிமாவில் இதுவரை எந்தத் திரைப்பட வசூலையும் சரியான மதிப்பில் யாரும் சொல்லியதே இல்லை. வருமான வரி, இன்ன பிற பல விஷயங்கள் அதில் அடங்கியிருக்கும்.
இருந்தாலும், ரசிகர்களுக்கும், வாசகர்களுக்கும் அந்தத் தோராய நிலவரத்தைத் தெரிந்து கொள்வதில் கூட ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. ரஜினிக்கு அடுத்து வசூலில் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என சில மாதங்களுக்கு முன் ஒரு பரபரப்பு நிலவியது. அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் அதிகம்.
ஆனால், அந்த எதிர்ப்புக்களையும் மீறி ‘கத்தி’ படத்தின் வசூல், விஜய்யை ஒரு சூப்பர் ஸ்டாராகவே தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் வெளிப்படுத்தி வருகிறது.
அதிலும் குறிப்பாக ‘கத்தி’ படத்திற்காக கேரளாவில் செய்யப்பட்ட விளம்பரங்களும், திரையரங்குகளில் நடைபெற்ற கொண்டாட்டங்களையும் பார்க்கும் போது மலையாள நடிகர்களைக் கூட பொறாமைப்படும் அளவிற்கு விஜய்யின் ‘கத்தி’ படத்தின் வசூல் இருக்கிறதாம்.
படம் வெளியான முதல் நாளே கேரளா முழுவதும் ‘கத்தி’ படம் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியிருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன் விஜய், மோகன்லால் இணைந்து நடித்த ‘ஜில்லா’ படத்திற்குப் பிறகு ‘கத்தி’ படத்தின் வசூல் அமைந்திருக்கிறதாம். ‘ஜில்லா’ படத்தில் மலையாள நடிகரான மோகன்லாலும் இருந்ததால் அந்த சாதனை முதலிடத்தில் இருந்தது. ஆனால், தனி நாயகனாக விஜய் நடித்து வெளியான ‘கத்தி’ படத்தின் கேரள வசூல் மலையாளத் திரையுலகிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
இந்த வசூலை இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படமும் புரிந்ததில்லை என்கிறார்கள்…அடுத்து ரஜினிகாநத் நடித்து வெளிவரும் ‘லிங்கா’ படம் இந்த சாதனையை முறியடிக்குமா என்பதே இப்போதைய கேள்வி….