கமல்ஹாசன் இயக்கம், நடிப்பில் 1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு அதன் பின் அப்படியே கிடப்பில் போடப்பட்ட படமான ‘மருத நாயகம்’ படம் மீண்டும் உயிர் பெறுகிறது.
இந்தப் படம் குறித்து ‘குமுதம்’ வார இதழில் இயக்குனர் பாலசந்தர் மறைவதற்கு சில நாட்களுக்கு முன் கமல்ஹாசனிடம் கேட்பதற்காக குமுதத்திற்கு அனுப்பிய கேள்வியான “மருதநாயகத்தைப் பார்க்க இன்னும் எத்தனை நாட்கள் எங்களைக் காக்க வைக்கப் போகிறாய் ? , ” என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
அதன்படி ‘மருதநாயகம்’ படத்தை லண்டனில் வசிக்கும் பெரும் தொழிலதிபரான கமல்ஹாசனின் நண்பர் ஒருவர் தயாரிக்க முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
படத்திற்கு நிறையச் செலவாகுமே என்று கமல்ஹாசன் கேட்டிருக்கிறார், அதற்கு அந்த தொழிலதிபர் ‘அத்தனை செலவையும் அந்தப் படம் தாங்கும், நானும் தாங்குவேன்,” என்று சொல்லியிருக்கிறார்.
பல தமிழ் ரசிகர்களும் கமல்ஹாசனிடம் நீண்ட நாட்களாக அந்தக் கேள்வியைக் கேட்டு வருகிறார்கள். இப்போது அனைத்திற்குமான பதில் கிடைத்துள்ளது.
தற்போது கமல்ஹாசன் நடித்து ‘உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2” ஆகிய படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வர உள்ளன. இந்தப் படங்கள் வெளியான பின்னோ அதற்கு முன்னரோ கூட ‘மருதநாயகம்’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
‘மருதநாயகம்’ படத்திற்காக 17 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட டிரைலரே மிகவும் பிரமிக்க வைத்தது. இப்போதைய தொழில்நுட்பத்தில் அந்தப் படம் கமல்ஹாசனின் கை வண்ணத்தில் உருவானால் தமிழ் சினிமா இன்னும் அதிகமாக உலக அளவில் நிச்சயம் பேசப்படும்.