‘முன் தினம் பார்த்தேனே, தடையறத் தாக்க’ ஆகிய படங்களுக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள ‘மீகாமன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்திற்கு ஊடகங்களிடமும் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது. ஆர்யா நடித்து இந்த ஆண்டு வெளிவந்துள்ள ஒரே படம் ‘மீகாமன்’தான். ‘சேட்டை’ படத்திற்குப் பிறகு ஹன்சிகா, ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.
இந்தப் படம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன் நிதிப் பிரச்சனை காரணமாக படம் வெளி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பிரச்சனையை படத்தின் நாயகனாக ஆர்யா தீர்த்து வைத்திருக்கிறார்.
இது சம்பந்தமாக படத்தின் வெற்றிச் சந்திப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி குறிப்பிட்டுப் பேசினார்.
“மீகாமன் என்றால் ‘கேப்டன் ஆப் த ஷிப்’ என்று அர்த்தம். ஆனால், ஆர்யா‘ கேப்டன் ஆப் த பிரண்ட் ஷிப்’ என்று இசையமைப்பாளர் தமன் ஆர்யாவைப் பற்றி என்னிடம் சொன்னார். அது உண்மைதான், அவருடைய பெரிய மனதால்தான் இந்தப் படம் சொன்ன தேதியில் வெளிவந்தது,” என்றார் இயக்குனர் மகிழ் திருமேனி.
ஆர்யா பேசும் போது,
“வழக்கமான கமர்ஷியல் படமா இல்லாத இந்தப் படத்துக்கு இவ்வளவு அருமையான விமர்சனங்கள், வரவேற்பு கிடைக்கிறது பெரிய விஷயம், ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
மகிழ் திருமேனி பேசும் போதும் சரி, அவர் படம் எடுக்கும் போதும் சரி எல்லாரும் அமைதியா உட்கார்ந்து பார்க்கிறாங்க. அவர் வேலை செய்யும் போது ரொம்ப தெளிவா வேலை பார்ப்பாரு. நாளைக்கு என்ன எடுக்கப் போறோம்கறத முன்னாடி நாளே பிரின்ட் அவுட் எடுத்து வச்சிருப்பாரு.
இன்னைக்கு நான் நல்லா நடிச்சிருக்கன்னு எல்லாரும் சொல்றதுக்கு காரணமே அவர்தான். லைட்டா திரும்புங்க, லைட்டா சிரிங்கன்னு சொல்வாரு. என்ன மகிழ் நான் ஒண்ணுமே பண்ணலையேன்னு கேப்பேன். ஆனா, அவர் மேல எனக்கு நம்பிக்கை இருந்தது. எல்லாத்தையுமே ரொம்ப அழகா பண்ணியிருக்காரு. அவரோட படத்துல நடிச்சதுக்கு ரொம்ப பெருமையா இருக்கு,” என இயக்குனர் மகிழ் திருமேனியை வெகுவாகப் பாராட்டினார் ஆர்யா.