கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்த் கூட்டணியில் ‘முத்து, படையப்பா’ படங்களுக்குப் பிறகு கடந்த 12ம் தேதி ரஜினி பிறந்த நாளன்று வெளிவந்த ‘லிங்கா’ திரைப்படம் இன்றுடன் 25வது நாளைத் தொட்டிருக்கிறது.
மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் படம் வெளியான சில நாட்களிலேயே இரண்டு நாட்களிலேயே 100 கோடி ரூபாயை வசூலித்தது என்ற செய்தி ஒரு புறமும், படம் வினியோகதஸ்தர்களுக்கு மிகப் பெரிய வசூலைத் தரவில்லை என்ற செய்தி மறுபுறமும் வெளிவந்தது.
அதையெல்லாம் மீறி படம் இன்று வெற்றிகரமாக 25வது நாளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அரையாண்டு விடுமுறை நாட்களின் போது படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருக்கலாம் என்றும் கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படம் வெளியான போது பல சிறிய ஊர்களில் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டும் 25வது நாளைத் தாண்டியிருக்கிறது என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம்.
‘லிங்கா’ திரைப்படம் வெளியான டிசம்பர் 12ம் தேதியன்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்து சுமார் 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இந்த 25வது நாளில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.