‘பசங்க’ளுக்காகவே உருவாக்கப்பட்ட கதை போலத் தோன்றுகிறது. எத்தனை நாட்களுக்குத்தான் மிகப் பெரிய ஹீரோக்களையே ஆக்ஷன் கதைகளில் பார்த்துக் கொண்டிருப்பது என இயக்குனர் நினைத்திருப்பார் போலும். அதனால்தான் இப்படி சின்னப் பையன்களை வைத்து ஒரு ஆக்ஷன் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் செல்வன். ‘கோலி சோடா’ படத்தில் ஒரு மார்க்கெட்டில் ரவுடியிசம் செய்து கொண்டிருக்கும் வலிமையான வில்லனை எதிர்த்த ‘பசங்க’, இந்தப் படத்தில் ஒரு மந்திரியையே எதிர்க்கிறார்கள். காதில் ‘மாலை’யையே வைக்கும்படியான கதையாக இருந்தாலும், கல்விக்காக மாணவர்கள் போராடுகிறார்கள் என்பது நெகிழ வைக்கும் விஷயமாக அமைந்துள்ளது. சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் பொய்யான கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி அடைக்கப்படுகிறார்கள். அங்கு ஜெயிலராக இருந்து கொண்டு சிறுவர்களைக் கொடுமைப்படுத்தும் இருவரை கடுமையாகத் தாக்குகிறார்கள். ஒரு மந்திரியை பழி வாங்குவதற்காக எஸ்.பி.யே அந்தச் சிறுவர்களைத் அங்கிருந்து தப்பிக்க வைத்து, மந்திரியைக் கடத்தச் சொல்கிறார். ஆனால், நண்பர்கள் நால்வரும் மந்திரி மகளை கடத்தி விடுகிறார்கள். அவர்கள் ஏன், மந்திரியைக் கடத்தாமல் மந்திரி மகளைக் கடத்துகிறார்கள், அவர்கள் எதற்காக சீர்திருத்தப்பள்ளிக்கு வந்தார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி டீன் ஏஜ் பருவ முடிவில் இருக்கிறார்கள். இவர்களை முழுமையாக இளைஞர்களாகவும் காட்ட முடியாமல், சிறுவர்களாகவும் காட்ட முடியாமல் அவர்களது கதாபாத்திரத் தன்மைக்கு இயக்குனர் சற்றே தடுமாறியிருக்கிறார். ஆனாலும், அவர்களது யதார்த்தமான நடிப்பு அதைப் பற்றியெல்லாம் யோசிக்க வைக்கவில்லை. நால்வருமே இயக்குனர் என்ன சொல்லி தந்திருக்கிறாரோ அதை அப்படியே செய்கிறார்கள். ஆக்ஷன் காட்சிகளில் கூட அட போட வைக்கிறார்கள். படத்தில் நாயகி என்று பவானி ரெட்டியைக் கூறலாம். ஆனால், நான்கு காட்சிகளில்தான் வந்திருப்பார். நடிப்பதற்கம் மிகப் பெரிய வாய்ப்பில்லை. மெயின் வில்லனாக ஜெயப்பிரகாஷ். பாந்தமான கதாபாத்திரங்களில் பார்த்தவரை பழைய வில்லனைப் போல் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர். போதாததற்கு அவருடைய மனைவியாக நடித்திருக்கும் சானா தெலுங்குப் பட வில்லியை ஞாபகப்படுத்துகிறார். நந்தா சரவணன், மூணார் ரமேஷ் சீர்திருத்தப் பள்ளியின் காவலர்களாக கொஞ்சமே வந்தாலும் உருட்டி, மிரட்டியிருக்கிறார்கள். தம்பி ராமையாவிற்கு அற்புதமான கதாபாத்திரம். ஏழை குடும்பக் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்க கஷ்டப்பட்டு பள்ளி நடத்துபவர். எல்லாரைக் காட்டிலும் மனதில் பதிகிறார். பைசலின் இசையில் பின்னணி இசை ஓகே. லோகிதாஸ் வசனம் ஆங்காங்கே நறுக்கென்று அமைந்துள்ளது. வஜ்ரம் – இன்னும் காய்ச்சியிருக்கலாம்