கமல்குமார் .ஜி தயாரித்து, படத் தொகுப்பு செய்து இயக்கியுள்ள படம் ‘யூகன்’.
இந்தப் படத்தில் யஷ்மித், சாக்ஷி அகர்வால், சித்து ஜிஆர்என், ஷியாம் கீர்த்திவாசன், பிரதீப் பாலாஜி, ஆயிஷா, தருண் சக்கரவர்த்தி, சுரேஷ் பிள்ளை, மனோஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
பாடல்களுக்கு இசை ரஷந்த் அர்வின், பின்னணி இசையை அலெக்ஸ் பிரேம்நாம் செய்திருக்கிறார்கள்.
ஐ.டி. கம்பெனிகளில் நடைபெறும் பிரச்சனையை மையக் கருத்தாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஐ.டி.நிறுவனங்களில் வேலை செய்யும் ஐந்து பேரின் ஈகோ மோதலால் ஏற்படும் பிரச்சனைகள், அதனால் ஏற்படும் திடுக்கிடும் சம்பவங்கள், கொலை வரை சென்று பின்னர் பேய்ப் படமாகவும் இந்தப் படம் மாறுகிறது.
படத்தைப் பற்றி இயக்குனர் கமல்குமார் கூறுகையில், “ஐ.டி.கம்பெனி பின்னணியில் கதையை எடுத்திருந்தாலும், எந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலும் இந்தக் கதையைப் படமாக்கவில்லை. ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கிடையே யார் பெரியவன் என்ற ஈகோ மோதல்கள் இருக்கும். அதனால், என்ன நடக்கிறது என்பதைத்தான் அலுவலகப் பின்னணியில் ஒரு பேய்ப்படமாகக் கொடுத்திருக்கிறோம்.
இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் சாக்ஷி அகர்வால்தான் பேயாகவும் நடித்திருக்கிறார். கிராஃபிக்ஸ் காட்சிகள் எதுவும் இல்லாமல் மேக்கப் மூலமும், கேமரா தந்திரம் மூலமும் காட்சிகளுக்கு பயத்தைச் சேர்த்திருக்கிறோம். படத்தில் யார் நாயகன் என்பதை சஸ்பென்சாகவே வைத்திருக்கிறோம். நான் படத் தொகுப்பாளராகவும் இருப்பதால் காட்சிகளில் விறுவிறுப்பை அதிகம் சேர்த்திருக்கிறேன்,’’ என்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, சிவகாசி, கொடைக்கானல், திருநெல்வேலி, கோவில்பட்டி, சேலம் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.
ஏப்ரல் மாத இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.