காதலுக்கு வயது ஒரு தடையா ? குடும்ப உறவுகளும், காதல் உணர்வுகளும், நகைச்சுவையும் கலந்த ஒரு அழகான அனுபவமாக ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிரிஷ்.ஏ.டி. எளிமையான கதைக்களத்துக்குள் மனிதர்களின் உணர்வுகளையும், அவர்களுக்குள் உருவாகும் உறவுகளையும் சுவாரஸ்யமாக பதிவு செய்திருக்கும் இப்படம், சிரிக்கவும் ரசிக்கவும் மட்டுமல்லாமல், சில இடங்களில் மனதை நெகிழவும் செய்கிறது.
இறந்த காதலியின் நினைவில் இருந்து இன்னும் மீள முடியாமல் வாழ்ந்து வரும் மத்திய வயது நபரான நிவின் பாலியின் பக்கத்து வீட்டில், கல்லூரி மாணவியான மமிதா பைஜு தனது குடும்பத்துடன் குடியேறுகிறார். ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே உருவாகும் நட்பு, நாளடைவில் காதலாக மாறுகிறது. இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் அவர்களது காதலில் ஏற்படுத்தும் தாக்கம், அதனால் உருவாகும் சூழல்கள் மற்றும் குடும்பத்தில் நடக்கும் களேபரங்கள் என அனைத்தையும் உணர்வுப்பூர்வமாகவும், நகைச்சுவை கலந்து ரசிக்கும்படியும் சொல்லியிருக்கிறது ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.
காதலிக்கும் பெண்ணுக்கும் தனக்கும் இருக்கும் வயது வித்தியாசத்தை தனது உடல்மொழியிலேயே அழகாக வெளிப்படுத்துவது, குறும்புக்கார இளம்பெண்ணின் செயல்களால் சங்கடப்படுவது, மீண்டும் ஒரு காதல் தோல்வியை எதிர்கொள்ளும் போது கலங்குவது என பல்வேறு உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் நிவின் பாலி. தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் படம் முழுவதையும் தனது தோள்களில் தாங்கி நிற்கிறார்.
கல்லூரி மாணவியாகவும், குறும்புத்தனமான இளம்பெண்ணாகவும் நடித்திருக்கும் மமிதா பைஜு, தனது துடிப்பான நடிப்பாலும் சுட்டித்தனமான உடல்மொழியாலும் கவனம் ஈர்க்கிறார். தனக்கும் தனது காதலனுக்கும் இடையே அதிக வயது வித்தியாசம் இருந்தாலும், அதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் காதலை அணுகும் அவரது கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது.
நிவின் பாலியின் தம்பியாக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப், பிந்து பணிக்கர், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ஸ்ரிந்தா, ஷமீர் கான், மீனாட்சி ரவீந்திரன், அயசங்கர் கரிமுட்டம், தங்கம் மோகன், வெட்டுக்கிளி பிரகாஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்துகிறார்கள். அவர்களின் இயல்பான நடிப்பும், திரையிருப்பும் படத்தின் நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.
ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு, கதை நகரும் நகரத்தையும், அங்கிருக்கும் தேவாலயத்தையும், ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்திருக்கும் வீடுகளையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். காதல் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளுக்கு மட்டுமல்லாமல், கதைக்களத்தின் சூழலையும் ரசிக்க வைக்கும் வகையில் இவரது ஒளிப்பதிவு அமைந்திருக்கிறது.
விஷ்ணு விஜய்யின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் காதல் உணர்வுகளுக்கு மேலும் உயிர் கொடுக்கின்றன. குறிப்பாக, கதாபாத்திரங்களால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளை தனது இசையின் மூலம் பார்வையாளர்களுக்கு கடத்துவதில் பின்னணி இசை முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு காதல் கதையை வழக்கமான பாதையில் சொல்லாமல், சற்று வித்தியாசமான அணுகுமுறையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆகாஷ் ஜோசப் வர்கீஸ். காட்சிகளுக்கு இடையேயான சரியான வேகம் மற்றும் கதையின் உணர்வுகளை பாதிக்காத படத்தொகுப்பு படத்திற்கு சாதகமாக அமைந்திருக்கிறது.
கிரிஷ்.ஏ.டி மற்றும் கிரண் ஜோசி ஆகியோரின் கதை மற்றும் திரைக்கதை மேலோட்டமாக பார்க்கும்போது மிகவும் எளிமையானதாகத் தெரிந்தாலும், அதற்குள் இடம்பெற்றிருக்கும் மனித உணர்வுகள் வலிமையானவை. குறிப்பாக, காதல் கதையை வழக்கமான காதல் காட்சிகளின் மூலம் மட்டும் நகர்த்தாமல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளுடன் கலந்து சொல்லியிருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
இயக்குநர் கிரிஷ்.ஏ.டி, மிகப்பெரிய திருப்பங்களோ அல்லது பிரமாண்டமான காட்சியமைப்புகளோ இல்லாமல், ஒரு சாதாரண காதல் கதையை இயல்பான மனிதர்களையும், அவர்களது அன்றாட வாழ்க்கையையும் மையமாக வைத்து சொல்லியிருக்கிறார். காட்சிகள் எளிமையாக இருந்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களுடன் இணைக்கும் விதத்தில் அவற்றை அமைத்திருப்பது சிறப்பு.
மொத்தத்தில், வயது வித்தியாசத்தைத் தாண்டி மலரும் காதலையும், அதைச் சுற்றியுள்ள குடும்ப உறவுகளையும் நகைச்சுவையோடு சொல்லியிருக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, மனதை வருடும் காதல் மற்றும் குடும்பக் கதையாக ரசிக்க வைக்கிறது.