திரை நட்சத்திரங்கள் அரசியலில் இறங்கும்போது என்ன நடக்கும்? எம்.ஜி.ஆரின் வாரிசு என்று கொண்டாடப்படுபவர்கள் உண்மையில் அந்த இடத்தை நிரப்பிட முடியுமா? இந்த கேள்விகளை நையாண்டியாகவும், நகைச்சுவையாகவும் திரையில் முன்வைக்கிறது இயக்குநர் உமாபதி ராமையாவின் ‘TN 2026.’ தமிழக அரசியலின் மேல் ஒரு கூர்மையான கோணத்தில் விழும் இந்த திரைப்படம், தேர்தல் காலத்தில் வெளிவந்திருப்பது தற்செயலில்லை — இது ஒரு நேர்மையான அரசியல் கண்ணாடி.
வட மாநிலத்தைச் சேர்ந்த நட்டி நட்ராஜ், சென்னைக்கு வாழ்வாதாரம் தேடி வந்து, எதிர்பாராத விதத்தில் நடிகராகி விடுகிறார். அவரது முதல் படமே மக்கள் மனதில் அடுத்த எம்.ஜி.ஆர் என்ற இடத்தை அவருக்கு பதித்து விடுகிறது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ஜமீன்தார் தம்பி ராமையா, நட்டியின் திறமையை ஆரம்பத்திலேயே கணித்து, அவரது சினிமா வளர்ச்சிக்கான அனைத்து ஆதரவையும் வழங்கி, உச்ச நடிகராக்கும் பணியில் தன்னையே அர்ப்பணித்துக் கொள்கிறார்.
சினிமாவின் உச்சியில் நிற்கும் நட்டியை அரசியலில் இறக்கி, புதிய கட்சியை தொடங்க வைத்து, 2026-ல் தமிழகத்தின் முதல்வர் நாற்காலி அவருக்கே என்ற கனவை மனதில் விதைக்கிறார் தம்பி ராமையா. ஆனால், அந்த தருணத்தில் நட்டி நட்ராஜ் எடுக்கும் ஓர் எதிர்பாராத முடிவு, அரசியல் உலகையே கலைத்துப் போடுகிறது. அந்த முடிவு என்ன என்பதை — அரசியல் நையாண்டியாக மட்டுமல்ல, திரை நட்சத்திரங்களின் அரசியல் ஆசைகளை நேரடியாக கேலி செய்யும் விதத்திலும் — சொல்கிறது ‘TN 2026.’
எம்.ஜி.ஆருக்குப் பிறகு பல திரை நட்சத்திரங்கள் அரசியலில் கால் வைத்தாலும், சினிமாவில் அவர் நிறுவிய மகத்தான இடத்தை அரசியலிலும் யாரும் தொட முடியவில்லை என்ற கசப்பான உண்மையை, இயக்குநர் உமாபதி ராமையா நகைச்சுவையோடும் கூர்மையோடும் முன்வைக்கிறார். ஒரு வெளிமாநில நடிகரின் சினிமா உச்சம், காதல், தாம்பத்திய சிக்கல், மற்றும் முடங்கிய அரசியல் கனவு ஆகியவற்றை ஒரே கோர்வையாக தொகுத்து, தற்போதைய தமிழக அரசியல் சூழலின் பின்னணியில் சுவாரஸ்யமாக பின்னியிருக்கிறார்.
கதாநாயகனாக நட்டி நட்ராஜ், குல்கந்த் குமார் என்ற கதாபாத்திரத்தில் திரையில் தங்க நட்சத்திரமாக ஜொலிக்கிறார். தமிழை தவறான உச்சரிப்புடன் பேசி மக்கள் மனதில் இடம் பிடிக்கும் ஒரு வெளிமாநில நடிகரின் பயணத்தை, தன் நடிப்பாலும் உடல்மொழியாலும் மிகவும் இயல்பாக உயிர்ப்பித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் வழங்கியிருக்கிறார்.
தம்பி ராமையா, ஜமீன்தார் என்ற பட்டம் இருந்தாலும் குல்கந்த் குமாரின் நிழல் சேவகனாக, வழிகாட்டியாக உருமாறும் பாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். அவரது தோற்றமும் கெட்டப்பும் ஒரு பிரபல நடிகரின் ரசிகர் மன்ற தலைவரை நினைவூட்டுவதோடு, அவரது திட்டங்களும் செயல்பாடுகளும் தற்போதைய தமிழக அரசியலின் சூறாவளியாக வலம் வரும் ஒரு குறிப்பிட்ட செயல் வீரரை மனதில் தொட்டுச் செல்கின்றன.
எம்.எஸ்.பாஸ்கரும் இளவரசும் குல்கந்த் குமாருடன் பயணிக்கும் அரசியல்வாதிகளாக திரையில் தென்பட்டாலும், அவர்களது பாத்திரங்கள் சிறப்பான தாக்கத்தை உருவாக்கவில்லை என்பது சற்று ஏமாற்றம் தருகிறது. நாயகியாக ஷெரிட்டா ராவும், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு தேவையான பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, பழைய காலக்கட்டத்தின் காட்சிகளுக்கும் பாடல் காட்சிகளுக்கும் வண்ணக் கோட்பாட்டின் மூலம் தனித்துவம் கொண்டு வந்திருக்கிறார். தற்போதைய காலக்கட்டத்தை அரசியல் சூழலுக்கு பொருந்தும் வண்ணம் எளிமையாகவும் இயல்பாகவும் படமாக்கியிருப்பது படத்திற்கு வலுவான அடித்தளமாக நிற்கிறது.
தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையானவை. பின்னணி இசை காட்சிகளுக்கு நெருக்கமாக பயணித்து, கதையின் அரசியல் நாடகத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. படத்தொகுப்பாளர் அருள் ஆர்.தங்கம், நடிகர்களின் சினிமா வாழ்வு, தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் ஆசை என்ற மூன்று தளங்களை திறமையாக ஒரு கோர்வையில் கோர்த்து சுவாரஸ்யமான திரை அனுபவமாக மாற்றியிருக்கிறார்.
தந்தையின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் உமாபதி ராமையா, கடந்த காலத்திலிருந்து தொடங்கும் கதையை தற்போதைய அரசியல் நிகழ்வுகளோடு இணைத்து கலகலப்பாக சொல்லியிருக்கிறார். திரை நட்சத்திரங்களின் அரசியல் ஆசைகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் சுயநல சூட்சிகளை நகைச்சுவை கலந்த கோணத்தில் அம்பலப்படுத்தியிருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.
கதாபாத்திர வடிவமைப்பும் காட்சியமைப்பும் பல நிஜ நட்சத்திரங்களை நினைவுபடுத்தினாலும், யாரையும் நேரடியாக புண்படுத்தாமல் அவர்களது அரசியல் சிந்தனைகளுக்கும் உந்துதல்களுக்கும் பின்னால் இருக்கும் மனிதர்களையும் சம்பவங்களையும் கற்பனையோடு கட்டமைத்திருக்கும் விதம் சிந்திக்கவைக்கிறது.
எனினும், குல்கந்த் குமார் என்ற பாத்திரம் அரசியல் கேள்விகளை எழுப்புவதை விட சம்பவங்களை மட்டும் பட்டியலிடுவதாக போவது, படம் சில இடங்களில் ஒரே இடத்தில் சுற்றுவதுபோல் தோன்றி தொய்வை உண்டாக்குகிறது. ஆனால், வசனங்களிலும் காட்சிகளிலும் திணிக்கப்பட்டிருக்கும் கூர்மையான அரசியல் கிண்டல்கள் அந்த குறைகளை மறக்கடித்து பார்வையாளர்களை குலுங்கி சிரிக்க வைக்கின்றன.
‘அமைதிப்படை’க்கு பிறகு தமிழில் ஒரு தரமான அரசியல் நையாண்டி படம் வரவில்லையே என்ற நெடுங்கால ஏக்கத்திற்கு பதிலளிக்கும் விதத்தில், தேர்தல் காலத்தில் வெளிவந்திருக்கும் ‘TN 2026’, தமிழக அரசியல் அரங்கில் ஒரு துணிச்சலான அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது — அது மட்டுமின்றி, ரசிக்கவும் வைக்கிறது.