RIP – விமர்சனம்

தமிழ்த் திரைப்படம் என்றாலே தமிழ்நாட்டில் தயாராகும் தமிழ்ப் படங்களைப் பற்றித்தான் பெரும்பாலான ரசிகர்களுக்குத் தெரியும்.

ஆனால், மலேசிய நாட்டில் தயாராகும் படங்களைப் பற்றி ரசிகர்களுக்கு அதிகம் தெரியாது. கடந்த ஆறேழு வருடங்களாக மலேசிய நாட்டில் தயாராகும் தமிழ்ப் படங்கள் அங்குள்ள ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் தயாராகும் தமிழ்ப் படங்களைப் போல பிரம்மாண்டமாக, பெரும் பொருட் செலவில் தயாராகவில்லை என்றாலும் நிறைவான படத்தைக் கொடுத்து எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான படங்களை உருவாக்க நினைக்கும் நம்பிக்கையுடன் பலர் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களில் இந்த ‘RIP’ படத்தை இயக்கியுள்ள எஸ்.டி.பாலாவும் ஒருவர். வெறும் 5 நாட்களில் மட்டுமே இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ஒவ்வொரு திரைப்படமும் அந்தந்த பகுதி சார்ந்த மக்களின் வாழ்வியலை எடுத்துச் சொன்னால்தான் அவை உலகப் படமாக மாறும் என்று சொல்வார்கள். இந்தப் படத்தில் மலேசியாவில் உள்ள ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்வியலை யதார்த்தமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பாலா.

மனைவி, இரு மகள்கள் என நடுத்தரக் குடும்பத்துத் தலைவராக இருக்கும் பாலா, திடீரென இறந்து விடுகிறார். நடு வீட்டில் அவருடைய உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அந்த வீட்டில் உறவினர்களுக்கு இடையிலும், நண்பர்களுக்கிடையிலும் எந்த மாதிரியான உணர்வுகள் வெளிப்படுகின்றன என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

ஒரு வீட்டுக்குள்ளேயே முழு படமும் நகர்ந்தாலும் காட்சிக்குக் காட்சி நடக்கும், நிகழ்வுகளும், வசனங்களும் ஒருவர் மறைந்த பின் அவரைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

படத்தை இயக்கியுள்ள எஸ்.டி.பாலா மறைந்த குடும்பத் தலைவராக நடித்துள்ளார். அவருடைய தம்பியாக நடித்திருப்பவரும், தம்பியின் மனைவியும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறியுள்ளார்கள். பாலாவின் தாய் மாமனாக நடித்திருப்பவர் அனுபவம் வாய்ந்த நடிகராகவே தெரிகிறார்.

படத்தில் நடித்துள்ள அனைவருமே சினிமா நடிகர்கள் போலத் தெரியவில்லை. அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களாகவே தெரிகிறார்கள். சில காட்சிகளில் மட்டும் சிலரின் நடிப்பு கொஞ்சம் நாடகத் தன்மையாக இருப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

சினிமாத்தனம் இல்லாத கதையைத் தேர்வு செய்தததற்காகவே இயக்குனரைப் பாராட்டலாம். நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற இயக்குனரின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

தமிழ்நாட்டில் வெளிவரும் சில மசாலாத்தனமான படங்களைப் பார்த்து சலித்துப் போனவர்களுக்கு, இப்படிப்பட்ட படங்கள் நிச்சயம் ஒரு மாற்றத்தைத் தரும்.

கலைஞர்கள்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – S.T.பாலா
இசை – ஜெய்ராகவேந்திரா
லவ் தீம் – ஸ்டான்லி ராய்
ஒளிப்பதிவு – சதீஷ் B.சரண்
எடிட்டிங் – முத்துராஜ் அருணாச்சலம்
நடிப்பு – எஸ்.டி.பாலா ( ஆத்மா ), சுலோச்சனா தேவி, தமிழரசி தனபாலன், சுசானா, சிவாஜி, வேனுமதி பெருமாள், நந்தகுமார், நவீன், சுந்தரா, ராமசுந்தரம்.

 

Read Previous

Dora received A

Read Next

Power Paandi – Official Trailer

Most Popular