ஓ பட்டர்ஃபிளை – விமர்சனம்

மன உளைச்சலும், தற்கொலை எண்ணமும், வாழ்வின் தத்துவமும் ஒன்றிணைந்து உருவான ஓ பட்டர்பிளை திரைப்படம், பார்வையாளர்களை ஆழமாக சிந்திக்க வைக்கும் ஒரு உணர்வுபூர்வமான படைப்பு.

திருமணமான சில மாதங்களிலேயே கணவரை இழந்த நிவேதிதா சதிஷ், தன் இருப்பே சுற்றியுள்ளவர்களுக்கு சுமையாக இருப்பதாக நம்பி, உயிரை மாய்த்துக்கொள்ள முயல்கிறார். அந்த நிலையில் அவருக்கு வழிகாட்டும் துறவியான சகோதரி லட்சுமி பிரியா மூலம், கடந்த காதல், திருமண வாழ்க்கை, கணவரின் மரணம் ஆகியவை ஒவ்வொன்றாக வெளியாகின்றன. “தான் தான் கணவரைக் கொலை செய்துவிட்டதாக” நிவேதிதா கூறும் அதிர்ச்சியான திருப்பமும், அதன் உண்மைப் பின்னணியும் தான் படத்தின் மையக்கதை.

நாயகியாக நிவேதிதா சதிஷ், வலிமையான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தாலும், அதை முழுமையாக வெளிப்படுத்தத் தவறிவிட்டார். ஏமாற்றிய முன்னாள் காதலனுக்கும், இழந்த கணவருக்கும் இடையே தவிக்கும் உணர்வை, அவரது நடிப்பு சரியாக பிரதிபலிக்கவில்லை. குறிப்பாக உண்மை வெளியான பிறகு, மற்ற கதாபாத்திரங்கள் பதற்றத்தில் தவிக்கையில், நிவேதிதா மட்டும் அலட்சியமாகவும், எந்த உணர்ச்சியும் இன்றியும் நடித்து, அந்த காட்சியின் தாக்கத்தையே குறைத்துவிட்டார்.

அதேசமயம், முன்னாள் காதலராக சிபி சந்திரனும், கணவராக அதுலும் தங்கள் பணியை சிறப்பாகச் செய்துள்ளனர். அதுல், அதிகப்படியான நாடகத்தனத்தைத் தவிர்த்து, இயல்பான அளவில் நடித்திருப்பது பார்வையாளர்களுக்கு நிம்மதியளிக்கிறது. சிறு வேடத்தில் நாசர் தன் அனுபவத்தால் படத்திற்கு தனி முத்திரை பதித்துள்ளார். துறவியாக லட்சுமி பிரியா சந்திரமெளலி, குழப்பமான மனங்களைத் தெளிவுபடுத்தும் பணியை அருமையாக கையாண்டுள்ளார். கீதா கைலாசத்தின் கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கிறது.

வைசாக் சோமநாத்தின் இசை பாடல்களில் சிறப்பாக ஒன்றும் தங்கவில்லை என்றாலும், பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றபடி பயணித்துள்ளது. ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன், சின்னச் சின்ன நிகழ்வுகள்கூட கதைக்கு முக்கியம் என்பதை கேமரா மூலம் அழகாக புரியவைத்துள்ளார். படத்தொகுப்பாளர் புவனேஷ் மணிவண்ணன், தொடக்கத்தில் சற்று குழப்பமாகத் தொடங்கும் கதையை இறுதியில் தெளிவாக முடித்து, பார்வையாளர்களை திருப்திப்படுத்தியுள்ளார்.

எழுதி இயக்கிய விஜய் ரங்கநாதன், “எல்லாமே தற்செயலானவை, யாரும் காரணமல்ல” என்ற உண்மையையும், “ஒரு உயிர் போவது மற்றொரு உயிர் பிழைப்பதற்கு வழியாக அமையும்” என்ற ஆழமான தத்துவத்தையும் அழகான காட்சிகளாக விவரித்துள்ளார்.

மன அழுத்தம், முடிவெடுக்க முடியாத தடுமாற்றம், இரு தரப்பு அழுத்தங்கள் ஆகியவற்றுக்கு இடையில் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் உள்மன நிலையை காட்சி மொழியில் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பது தான் ஓ பட்டர்பிளையை ரசிக்க வைக்கும் பலம். 

Read Previous

யார்ரா அந்த பையன் நான்தான் அந்த பையன் – விமர்சனம்

Read Next

முஸ்தபா முஸ்தபா – விமர்சனம்