நிறங்கள் மூன்று - விமர்சனம்

23 Nov 2024

2016ல் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ மூலம் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் நரேன், அதன் பிறகு‘மாபியா – சாப்டர் 1’ மற்றும் ‘மாறன்’ படங்களை இயக்கினார். ஆனால், அவை வெற்றி பெறவில்லை. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அவரது அடுத்த படமாக இப்படம் வெளிவந்துள்ளது.

‘நிறங்கள் மூன்று’ படம் மூன்று பிரதான கதாபாத்திரங்களைச் சுற்றி நடைபெறுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனியே சில பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களது பிரச்சினை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து படம் முடிவுக்கு வருகிறது. இப்படம் கதைக்களத்தில் சுவாரசியமாக நகர்ந்தாலும், அதிர்வு தரும் காட்சிகள் அல்லது உணர்ச்சி ஊட்டும் காட்சிகள் இல்லாமல் மிகவும் நிதானமாகக் கதை சென்று முடிகிறது.

பள்ளி மாணவரான துஷ்யந்த், தனது ஆசிரியர் ரகுமானின் மகளான அம்மு அபிராமியைக் காதலிக்கிறார். ஒருநாள், அதிகாலையில் டியூஷனுக்குச் சென்ற அம்மு காணாமல் போய்விடுகிறார். துஷ்யந்த் மற்றும் ரகுமான் தனித்தனியாக அம்முவைத் தேடத் தொடங்குகிறார்கள். சினிமாவில் இயக்குனராகச் சாதிக்க விரும்பும் அதர்வா, தனது கதையை திருடி பிரபல இயக்குனர் படமெடுக்கத் திட்டமிடுவதைத் தடுக்க அவரது நண்பர்களுடன் போராடுகிறார். மற்றொரு கதையாக இன்ஸ்பெக்டரான சரத்குமார் லஞ்சம் வாங்குபராக இருந்தாலும், அமைச்சரின் மகன்களுடன் மோதுகிறார். இந்தக் கதாபாத்திரங்களும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் கிளைமாக்சில் ஒரு முடிவுக்கு வருகின்றன.

அதிர்ச்சி தரும் விதத்தில் போதைக்கு அடிமையான ஒரு இளைஞனாக அதர்வா நடித்திருக்கிறார். அவர் போதைப் பொருட்களைப் பயன்படுத்துதை டீடெயிலாகக் காட்டுவது ஏற்க முடியாத ஒரு குறை.

அப்பாவியாகக் காட்சி தரும் ரகுமானின் பாத்திரத்தில் நாம் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் உள்ளது. ஒருவரின் தோற்றத்திற்கும், செயலுக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில் நடித்திருக்கிறார் ரகுமான்.

சரத்குமாரின் பாத்திரம் லஞ்சம் வாங்கும் இன்ஸ்பெக்டராக இருந்தாலும், அமைச்சரையும், அவரது மகன்களையும் எதிர்த்து நிற்கிறார். அவரது காட்சிகள் குறைவாக இருந்தாலும் அவரது நடிப்பில் உள்ள கம்பீரம் குறையவில்லை.

துஷ்யந்தின் தோழியாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் வழக்கம் போல யதார்த்தமாக நடித்துள்ளார்.

ஜேக்ஸ் பிஜாய் இசை மற்றும் டிஜோ டோமி ஒளிப்பதிவு இப்படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

படத்தில் இத்தனை முக்கிய கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஏதாவது ஒரே ஒரு கதாபாத்திரத்தை மிக ஆழமாக உருவாக்கி, அது நம்மை ஈர்க்கும் விதத்தில் அமைந்திருந்தால் படம் ஒரு தாக்கத்தைக் கொடுத்திருக்கும்.

Tags: nirangal moondru

Share via: