பணி - விமர்சனம்
23 Nov 2024
கேரளாவின் திருச்சூர் நகரில் தனது சக்திவாய்ந்த சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தியுள்ள நாயகன் ஜோஜு ஜார்ஜ். அவரது அனுமதி இன்றி அங்கு எதுவும் நடைபெறாது. இந்தச் சூழலில், குற்றச் செயல்களில் ஈடுபடும் இரண்டு இளைஞர்கள் அவரது வாழ்க்கையில் நுழைந்து, அவருக்குத் திருப்பமளிக்கும் ஒரு சம்பவத்தை ஏற்படுத்துகிறார்கள். அந்த இழப்பு காரணமாக, தனது மொத்த சாம்ராஜ்யத்தையும் பயன்படுத்தி அவர்களை பழி தீர்க்க முயற்சிக்கும் ஜோஜு ஜார்ஜ், எதிர்பாராத விதமாக அவர்களும் பதிலடி கொடுக்க, இறுதியில் ஜோஜு எவ்வாறு வெற்றி பெறுகிறார் என்பதே 'பணி’' படத்தின் கதை.
ஜோஜு ஜார்ஜ் தனது இயல்பான நடிப்பில், வேட்டி சட்டையுடன் தனி பாணியில் நாயகனாக ஜொலிக்கிறார். மனைவியின் துயரத்தைக் கண்டு கலங்கும் காட்சிகளிலும், அதற்குக் காரணமானவர்கள் மீது கொண்ட கோபத்தை கண்களில் வெளிப்படுத்துவதிலும், அவர் அருமையாக நடித்துள்ளார்.
அபிநயா, ஜோஜு ஜார்ஜின் மனைவியாக அழகும் நடிப்பும் இணைந்து பார்வையாளர்களை ஈர்க்கிறார். வில்லன்களாக சாகர் சூர்யா மற்றும் ஜுனாயஸ்.வி.பி இருவரும் கதைக்குத் தேவையான தீவிரத்தையும் மிரட்டலையும் சேர்க்கிறார்கள்.
படத்தில் சீமா, பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், பாபி குரியன், ரஞ்சித் வேலாயுதம், சாந்தினி ஸ்ரீதரன், அபாயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், லங்கா லக்ஷ்மி, பிரிட்டோ டேவிஸ், ஜெயசங்கர், அஷ்ரப் மல்லிசேரி, டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ் உள்ளிட்டவர்கள் தங்கள் கதாபாத்திரங்களில் பொருத்தமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வேணு மற்றும் ஜிண்டோ ஜார்ஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாண்டமாகவும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளன. விஷ்ணு விஜய் மற்றும் சாம்.சி.எஸ் ஆகியோரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையின் போக்குக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. குறிப்பாக, பின்னணி இசை திரைக்கதைக்கு கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது.
மனு ஆண்டனியின் படத்தொகுப்பு மற்றும் அஜயன் அடாட்டின் ஒலி வடிவமைப்பு படத்திற்கு மேலும் முழுமையைக் கொடுத்துள்ளது.
ஆக்ஷன் கமர்ஷியல் கதையாக இருந்தாலும், அதை சுவாரஸ்யமாகவும், எதிர்பார்ப்புடனும் திரைக்கதையில் கொடுத்துள்ளார் ஜோஜு ஜார்ஜ். பல கதாபாத்திரங்களை திரைக்கதையில் இணைத்து, படத்தை வேகமாக நகர்த்துகிறார். இரண்டு இளைஞர்கள் நாயகனிடம் சிக்குவார்களா என்ற கேள்வியை ஏற்படுத்தி, பார்வையாளர்களைத் தவிக்க செய்கிறார்.
கார்த்தி நடித்து தமிழில் வெளிவந்த 'நான் மகான் அல்ல' படத்தில் இருப்பதைப் போல ரவுடி இளைஞர்களின் வெறியாட்டத்தை நாம் பார்த்திருந்தாலும், அதற்கு மாறுபட்ட வடிவத்தில் 'பணி' படத்தை உருவாக்கியுள்ளார் ஜோஜு ஜார்ஜ். விறுவிறுப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் கதையை முன்னெடுத்து, இயக்குநராக வெற்றி பெற்றுள்ளார்.
Tags: pani, joju george