மான்ஸ்டர் – விமர்சனம்

‘ஈ’யை வைத்து எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்து ரசித்தாகிவிட்டது. அப்புறம் எலியை வைத்து படமெடுத்தால் ரசிகர்கள் ரசிக்க மாட்டார்களா என்ன ?.

சொல்ல வந்த விஷயத்தை சுவாரசியமாகச் சொன்னால் ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த ‘மான்ஸ்டர்’.

பலருடைய வீட்டில் எலித் தொல்லை என்பது கண்டிப்பாக இருக்கும். அப்படி ஒரு எலியால் எப்படிப்பட்ட சிரமங்களை நாயகன் அனுபவிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் குழந்தைகளும் ரசிக்கும் விதத்தில் ஒரு சுவாரசியமான காமெடிப் படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

எஸ்ஜே சூர்யா வாங்கிய வீட்டிற்குள் ஒரு எலி புகுந்து கொண்டு அட்டகாசம் செய்கிறது. அந்த எலியால் அவருடைய நிம்மதி எல்லாம் போகிறது. தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பிரியா பவானி சங்கருக்காக வாங்கி வைத்த காஸ்ட்லி ஷோபாவைக் கூட கடித்துக் குதறி நாசம் செய்கிறது.

அதே சமயத்தில் அந்த வீட்டிற்குள் ஒரு ரஸ்க்குக்குள் வைரங்களை வைத்து மறைத்து வைத்த அனில்குமார், அந்த வைரங்களை எடுக்க திட்டமிடுகிறார். சூர்யா வீட்டிற்குள் இருக்கும் எலி வைரம் வைத்திருந்த ரஸ்க்கை சாப்பிட்டதைக் கண்டுபிடிக்கிறார். எலியை விரட்டும் பெஸ்ட் கன்ட்ரோலர் போல வீட்டுக்குள் அடிக்கடி வந்து வைரங்களைத் தேடுகிறார்.

எலி சிக்கியதா, வைரங்கள் கிடைத்ததால், எலித் தொல்லையிலிருந்து சூர்யா தப்பித்தாரா இல்லையா என்பதுதான்ன் படத்தின் மீதிக் கதை.

இதுவரை நாம் பார்த்த எஸ்ஜே சூர்யா வேறு, இந்தப் படத்தில் நாம் பார்க்கும் சூர்யா வேறு. திருமண வயதைக் கடந்தவராக, ஒரு எலியால் சிக்கிக் கொண்டு நிம்மதியை இழப்பவராக, தனக்கும் ஒரு அழகான பெண் கிடைத்துவிட்டாளே என்று மகிழ்ச்சியடைபவராக புதிய பரிமாணத்தில் ரசிக்க வைக்கிறார்.

பிரியா பவானி சங்கர், அழகான குடும்பத்துப் பெண்ணாக வந்து ஆர்பாட்டமில்லலாமல் அழகான புன்சிரிப்புடன் கவர்கிறார்.

சூர்யாவின் நண்பராக கருணாகரன், தனி காமெடியனாக கலக்குகிறார். அவருடைய ஒன்லைன் வசனங்கள் சிரிக்க வைக்கின்றன.

ஒரு வீட்டுக்குள்யேயே சூர்யா, எலி என திரும்பத் திரும்ப காட்சிகள் நகர்வது கொஞ்சம் போரடித்தாலும் நகைச்சுவை படம் முழுவதும் நிரம்பியிருப்பதால் ‘மான்ஸ்டர்’ ரசிக்க வைக்கிறது.

மான்ஸ்டர் – எலியின் மிரட்டல்

Read Previous

நட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்

Read Next

மிஸ்டர் லோக்கல் – விமர்சனம்

Most Popular