தமிழ் சினிமாவில் புதிய அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களை திருப்பிப் பார்க்க வைத்திருக்கும் ‘லீடர்’ படம், சாதாரண மனிதனின் உள்ளார்ந்த வீரத்தையும், தந்தை-மகள் பாசத்தையும் கலந்து கொடுக்கும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம். தூத்துக்குடி நிலப்பரப்பில் தொடங்கி உலக அளவுக்கு விரியும் இந்தக் கதை, விறுவிறுப்பான திருப்பங்களுடன் இறுதிவரை நம்மை சீட்டுக்கு ஒட்ட வைக்கிறது. இந்தப் படத்தின் முழுமையான விமர்சனம் இதோ!
தூத்துக்குடியைச் சேர்ந்த கார் மெக்கானிக் லெஜண்ட் சரவணன், தன் மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். தாயில்லாத மகள் மீது அளவில்லாத அன்பு கொண்ட அவர், அவளுக்காக எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் துணிவு மிக்கவர்.
தூத்துக்குடி துறைமுகத்தை தன் கையில் வைத்திருக்கும் கொடிய வில்லன் பாகுபலி பிரபாகரன் மூலம் நடைபெற இருக்கும் பெரிய சதியைத் தடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா தீவிரமாக முயல்கிறார். அது தோல்வியடைய, துறைமுகத்துக்குள் அடிக்கடி வந்து செல்லும் லெஜண்ட் சரவணனைப் பயன்படுத்தி அந்தப் பணியை முடிக்க ஆண்ட்ரியா திட்டமிடுகிறார். அதன்படி, அவரது மகளை மையமாக வைத்து போடப்படும் தந்திரத்தால் சரவணன், பிரபாகரனின் கடத்தல் பொருட்களை போலீசிடம் சிக்க வைப்பதோடு, அந்த பெரிய சாம்ராஜ்யத்தையே தகர்க்கும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
ஒரு சாதாரண கார் மெக்கானிக்கின் இந்த திடீர் அதிரடி செயல்களால் சந்தேகம் அடையும் காவல்துறை உயர் அதிகாரி ஷாம், ரகசிய விசாரணையில் இறங்குகிறார். அப்போது, லெஜண்ட் சரவணன் திட்டமிட்டு காவல்துறையையே பயன்படுத்தி பாகுபலி பிரபாகரனை அழித்திருப்பதை கண்டறிகிறார். தொடர் விசாரணையில் சரவணன் பற்றிய பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகின்றன. அவர் யார்? அவரது உண்மையான அடையாளம் என்ன? என்பதை அதிவேக திரைக்கதையுடன் அமர்க்களமான ஆக்ஷன் காட்சிகள் மூலம் சொல்கிறது ‘லீடர்’.
நாயகனாக நடித்த லெஜண்ட் சரவணன், இரண்டாவது படத்திலேயே முழு அளவிலான ஆக்ஷன் ஹீரோவாக உருமாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். சாதுவான அறிமுகத்திலிருந்து ஒவ்வொரு அதிரடி செயல்களிலும், சண்டைக் காட்சிகளிலும் திரைக்கதைக்கு புதிய உயிரூட்டியிருக்கிறார். அவரது தோற்றமும் உடல் மொழியும் அகமார்க்க ஆக்ஷன் ஹீரோவுக்கு சரியான பொருத்தம். மகளின் அன்புக்காக ஏங்கும் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திய அவர், தற்போதைய கோலிவுட் மாஸ் ஹீரோக்களையே பின்னுக்குத் தள்ளும் வகையில் தன் கதாபாத்திரத்தை துல்லியமாக கையாண்டு பாராட்டுகளை அள்ளியிருக்கிறார்.
நாயகியாக பாயல் ராஜ்புத் வருகிறார். அவருக்கு பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும், திரைக்கதையின் முக்கிய திருப்பங்களுக்கு அவர் கொடுத்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக ஆண்ட்ரியா ஜெர்மையா, உயர் அதிகாரியாக ஷாம், வில்லனாக சந்தோஷ் பிரதாப் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அவர்களின் திரை இருப்பு படத்துக்கு கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது.
பாகுபலி பிரபாகரன், லால், விடிவி கணேஷ், அமிர்தா ஐயர், சிறுமி இயல் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் திரைக்கதையின் ஓட்டத்துக்கு தேவையான ஆதரவை அளித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் எஸ்., ஹீரோவையும் அவரது சண்டைக் காட்சிகளையும் அற்புதமாக படமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேமும் பிரமாண்டமாகத் தெரியும் வகையில் அவர் பணியாற்றியிருப்பது படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பின்னணி இசை திரைக்கதையின் வேகத்துக்கு ஏற்றவாறு அமைந்துள்ளதோடு, அதிக ஆக்ஷன் காட்சிகள் இருந்தபோதும் அளவான சத்தத்துடன் கையாளப்பட்டு படத்துக்கு கூடுதல் சக்தியைப் பொழிந்துள்ளது.
படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ், ஆக்ஷன் காட்சிகளை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கூர்மையாக வெட்டி ஒட்டியிருக்கிறார். திரைக்கதை எந்த இடத்திலும் தொய்வடையாமல் வேகமாக நகர்வதற்கு அவரது பணி முக்கிய காரணம்.
ஆக்ஷன் படமாக இருந்தாலும், அப்பா-மகள் உணர்ச்சிகளை சரியான அளவில் கலந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில். தூத்துக்குடியில் தொடங்கும் கதையை இந்திய எல்லையைத் தாண்டி சர்வதேச அளவில் விரித்து, பார்வையாளர்களின் கவனத்தை இறுதிவரை தக்க வைத்திருக்கிறார்.
லெஜண்ட் சரவணனை முழு அளவிலான ஆக்ஷன் ஹீரோவாக காட்டியதோடு, அந்த உருவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். கிளைமாக்ஸ் அருகே வரும் சில திருப்பங்கள் ஆச்சரியப்பட வைத்தாலும், அவை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றாலும், அது படத்தின் வேகத்துக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மொத்தத்தில், அமைதியாக வாழும் ஹீரோவின் மறுபக்க அதிரடியை சொல்லும் பல படங்களுக்கு மத்தியில், இந்தக் கதையை முழுமையான ஆக்ஷன் பொழுதுபோக்காக மாற்றியதில் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.