உடல் நோய்களை கண்டறிவது முதல் பொய்-உண்மை கண்டுபிடிப்பது வரை அறிவியல் கருவிகள் உதவும் போது, காதலை ஏன் கண்டுபிடிக்க முடியாது? என்ற கேள்வி, அறிவியல் ஆர்வலரான நாயகி பாடினி குமாரின் மனதில் எழுகிறது. அதற்கு பதிலாக, ஒருவர் மீது மற்றொருவருக்கு இருக்கும் காதல் அளவை அளக்கும் ஒரு கருவியை அவர் உருவாக்குகிறார் – அது வெற்றிகரமாக இயங்குகிறது! இந்நிலையில், நாயகன் குரு லக்ஷ்மன் அவரைச் சந்தித்து, இக்கருவியை கிண்டல் செய்து, அது உண்மையான காதலை கண்டுபிடிக்க முடியாது என்று நிரூபிப்பதாக சவால் விடுகிறார். மேலும், நாயகியைத் தானே காதலிக்க வைப்பதாகவும் உறுதியளிக்கிறார். இந்த சவாலில் யார் வென்றார்? அறிவியலா? உணர்வுகளா? இதுவே ‘ஹார்டிலே பேட்டரி’யின் மையக் கதை, அறிவியல் கலந்த காதல் பயணமாக சுவாரசியமாக விரிகிறது.
நாயகி பாடினி குமார் மற்றும் நாயகன் குரு லக்ஷ்மன் இடையிலான கெமிஸ்ட்ரி, தொடரின் மிகப்பெரிய பலம். இருவருக்குமான அறிமுகக் காட்சிகள், உரையாடல்கள் ரசனைக்குரியவை; சவால் தொடர்பான காட்சிகள் கவிதை போல அழகாகப் பயணிக்கின்றன. பாடினி குமார் அறிவியல் ஆர்வலராகவும், காதல் உணர்வில் திளைப்பவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். குரு லக்ஷ்மன் தனது சவால் மனப்பான்மையுடன் கலகலப்பூட்டுகிறார்.
மற்ற கதாபாத்திரங்களில் சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகலக்ஷ்மி, இனியள், ஜீவா ரவி, சர்மிளா, பிரவீன் பிரின்ஸி, கலை, அஜித் பவித்ரா, சீனு போன்றோர் தங்கள் வேடங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாகப் பொருந்தியுள்ளனர். அவர்களின் நடிப்பு கதையை மேலும் உயிரோட்டமாக்குகிறது.
கூலி செளந்தரராஜனின் ஒளிப்பதிவு காட்சிகளை உயிர்ப்புடன் காட்டுகிறது. மைக்கேல் ஆகாஷின் இசை காதல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. நிசாமின் படத்தொகுப்பு மற்றும் அனிமேஷன், ராஜா.டி.எஸ்-ன் கலை வடிவமைப்பு என அனைத்து தொழில்நுட்பக் கூறுகளும் காதல் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. எபிசோடுகளின் ஓட்டம் சீராக இருப்பதால், பார்வையாளர்களை சலிப்படைய விடாமல் இழுத்துச் செல்கின்றன.
எழுத்தாளர்-இயக்குநர் சதாசிவம் செந்தில்ராஜன், காதல் கதையை வித்தியாசமாக அறிவியலுடன் இணைத்து ரசிக்க வைத்திருக்கிறார். அறிவியல் கருவி மூலம் காதலை கண்டுபிடிப்பது சாத்தியம் என்று ஒருபுறம் வாதிடும் அதே வேளை, காதல் என்பது கருவியைத் தாண்டிய உணர்வு என்று மறுபுறம் சுவைபட விவரித்திருப்பது அருமை. தொடராக இருந்தாலும், ஒவ்வொரு எபிசோடும் சுவாரசியத்தைத் தக்க வைக்கிறது. அறிவியல் ஃபிக்ஷன் கலந்த காதல் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு, ஆனால் சில இடங்களில் கதை இன்னும் ஆழமாகச் சென்றிருக்கலாம்.
வித்தியாசமான கான்செப்ட் மற்றும் சுவாரசியமான காதல் பயணம் கொண்ட இணையத் தொடர். அறிவியல் மற்றும் உணர்வுகளின் கலவையில் திகழும் இது, புதிய முயற்சியாக பாராட்டத்தக்கது. காதல் ரசிகர்களும் அறிவியல் ஆர்வலர்களும் கண்டிப்பாக பார்க்கலாம்!