ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் – விமர்சனம்

படத்தின் பெயரே இது என்ன மாதிரியான ஒரு படம் என்பதை ஓரளவிற்கு புரிய வைக்கும்.

‘ஆட்டோகிராப்’ படத்தை கொஞ்சம் மாற்றி யோசித்தால் எப்படி என இயக்குனர் ஓடம் இளவரசு யோசித்திருப்பார் போலிருக்கிறது. அதை நகைச்சுவையாகக் கொடுக்க முயற்சித்து ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஜெமினி கணேசன் என்ற பெயருடைய அதர்வா, அவருடைய முன்னாள் காதலிக்கு அவருடைய திருமணப் பத்திரிகையைக் கொடுக்க மதுரைக்குச் செல்கிறார். அந்த வீட்டில் அவர் முன்னாள் காதலி இல்லை. வீட்டின் மாடியில் குடியிருக்கும் சுருளிராஜன் என்ற பெயருடைய சூரியைத் துணைக்கு அழைத்துக் கொண்டு காதலியைத் தேடிச் செல்கிறார். அப்போது சூரியிடம் அவருடைய காதல் கதையை அவிழ்த்து விடுகிறார். அதர்வாவின் வாழ்க்கையில் வந்து போன நான்கு காதல்களைப் பற்றிச் சொல்கிறார். அந்தக் காதல்களும், காதல்களின் முடிவும்தான் படத்தின் கதை.

அதர்வா முதன் முறையாக நகைச்சுவை நாயகனாகவும் நடித்திருக்கிறார். நகைச்சுவையும் அவருக்கு நன்றாகவே வருகிறது. அதைவிட காதல் இன்னும் நன்றாக வருகிறது. ரெஜினா, அதிதி, பிரணீதா, ஐஸ்வர்யா ராஜேஷ் என நான்கு காதல்கள். ஒவ்வொருவரிடம் பழகுவதும், காதல் மொழி பேசுவதும் அவருக்குக் கைவந்த கலையாகவே இருக்கிறது.

ரெஜினா, அதிதி, பிரணீதா, ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு மணி நேரப் படத்தில் ஆளுக்குக் கொஞ்ச நேரம் பிரித்துக் கொள்கிறார்கள். நால்வரில் ரெஜினாதான் மனதில் இடம் பிடிக்கிறார்.

படத்தைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளவர் சூரி. அவருடைய நகைச்சுவை நடிப்புதான் படம் முழுவதையும் கலகலவென ரசிக்க வைக்கிறது. அதிலும் கிளைமாக்சில் அவருடைய மனைவி யார் என நினைத்து கலங்குவது எதிர்பார்க்காத ஒரு டிவிஸ்ட்.

மற்ற நட்சத்திரங்களில் டி. சிவா, சோனியா, ராஜேந்திரன் கொஞ்சமாக வந்தாலும் குறிப்பிட வைக்கிறார்கள்.

இமான் இசையில் ‘அம்முக்குட்டியே…’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்.

Read Previous

பண்டிகை – விமர்சனம்

Read Next

30 நாளில் ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு நிறைவு