வால்டர் – குழந்தைகள் கடத்தலின் பின்னணி

11:11 புரொடக்ஷன்ஸ் சார்பில் ஸ்ருதி திலக் தயாரிக்க, அறிமுக இயக்குனர் அன்பு இயக்கும் படம் ‘வால்டர்’.

இப்படத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடிக்க ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ பட நாயகி ஷ்ரின் கான்ஞ்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். நட்டி, சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு தணிக்கை முடிவடைந்து ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தை மார்ச் 13ம் தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

படம் பற்றி இயக்குனர் அன்பு கூறுகையில்,

“இத்திரைப்படம் துவங்கப்பட்ட நாள் முதலாக, படத்தைச்  சுற்றி எப்போதும் நல்ல விசயமே நடந்து வருகிறது. தற்போது மேலும் ஒரு நல்ல அங்கீகாரம் படத்திற்கு கிடைத்திருக்கிறது. 

சமூகத்தில் நிலவும் மிக முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியிருப்பதால் சென்சார் போர்டில் எங்கள் படத்திற்கு U/A சான்றிதழ் தான் கிடைக்கும் என நினைத்தோம். ஆனால் சென்சார் போர்டில் படத்தின் அழுத்தமான கதையை சரியாகப் புரிந்து கொண்டு ‘U’ சான்றிதழ் அளித்தார்கள். 

‘வால்டர்’  திரைப்படம் தமிழகத்தில் நடந்து வரும் குழந்தை கடத்தலை,  அதன் பின்னணியை களமாகக் கொண்டு அழுத்தமான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 

தினமும் நாம் தொலைக்காட்சிகளில் பார்க்கும் போதும், செய்தித்தாள்களில் படிக்கும் போதும் பிறந்த குழந்தை முதல் பல குழந்தைகள் கடத்தப்படுவதை அறிந்து வருகிறோம். இது என்னை மன ரீதியாக பெருமளவில் பாதித்தது. 

இதனை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி ஒரு திரைப்படம் எடுக்கத் தீர்மானித்தேன். அதற்காக குழந்தை கடத்தலின் பின்னணிக் களத்தை ஆராய்ந்த போது, பல அதிரவைக்கும், திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 

அதனை முழுவதுமாக இத்திரைப்படத்தில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன். இப்படம் நடிகர் சிபிராஜுக்கு  சிறப்பான ஒரு படமாக இருக்கும். அவரது திரைவாழ்வில் இப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர் அன்பு.

Read Previous

ஜிப்ஸி – காட்சி வீடியோ – சென்சார் கட் – 1

Read Next

‘சூர்ப்பனகை’ – முதல் பார்வையை வெளியிட்ட விஜய் சேதுபதி