ஸ்டார் குழுமத்தின் தமிழ் சேனல்களில் ஒன்றான ஸ்டார் விஜய், தமிழ் தொலைக்காட்சிகளில் பல புதிய மாறுபட்ட நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் வழங்கி முன்னணி சேனல்களில் ஒன்றாக இருக்கிறது.
அந்த சேனலின் தனி திரைப்பட சேனலாக விஜய் சூப்பர் சேனல் மூன்று வருடங்கள் மு ஆரம்பமாகி அதுவும் மூவி சேனல்களில் முக்கிய சேனல் என்ற பெயரைப் பெற்றுவிட்டது.
இப்போது விஜய் குடும்பத்தின் கடைக்குட்டி சேனலான ‘விஜய் மியூசிக்’ சேனல் அக்டோபர் 4ம் தேதி முதல் தனது ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளது.
அக்டோபர் 4ம் தேதியன்று ஆரம்பமான ‘பிக் பாஸ் 4’ நிகழ்ச்சிக்கிடையில் கமல்ஹாசன் இந்த மியூசிக் சேனலின் ஒளிபரப்பை ஆரம்பித்து வைத்தார்.
இடைவிடாமல் பாடல்களைக் கேட்பதற்காக இந்த மியூசிக் சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் யாரும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க மாட்டாக்ரள்.
அதற்குப் பதிலாக ‘வத்திக்குச்சி, பத்திக்குச்சி’ என்ற இரண்டு அனிமேஷன் கேரக்டர்கள் சுவாரசியமான பேச்சுக்கள், ஜோக்குகள் ஆகியவற்றை நாள் முழுவதும் வழங்கும்.
விஜய் டிவியைப் போலவே புதிய திறமைசாலிகளை அடையாளம் காணும் வகையில் புதிய நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. “எங்க புள்ளிங்கோலாம் பயங்கரம், கண்ணா பாட்டு பாடாம செய்யறே’ உள்ளிட்ட மேலும் புதிய நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து வர உள்ளன.
அக்டோபர் 4ம் தேதியன்று ஆரம்பமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சி விஜய் மியூசிக் சேனலில் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும். இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் காணாத சில காட்சிகளைக் காணலாம்.
மேலும், விஜய் மியூசிக்கில் ‘பிபி வேற லெவல்’ என் நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறன்றும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்கள். இதில் ஒவ்வொரு வாரத்திலும் நடைபெற்ற சுவாரசியமான விஷயங்கள் தொகுப்பாளர்களாலும், பிரபலங்களாலும் விவாதிக்கும் வகையில் இருக்கும்.