வீர தீர சூரன், மாஸ் ஆன படம் - விக்ரம்
24 Mar 2025
HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீரதீர சூரன் பார்ட் 2 ' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'வீர தீர சூரன் - பார்ட் 2' வெளியாகிறது . இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடம் சென்றடைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் - மதுரை - திருச்சி - கோயம்புத்தூர் - உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப் படுத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக நேற்று ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், நடிகர் பிருத்விராஜ், தயாரிப்பாளர்/ விநியோகஸ்தர் என் வி ஆர் சினிமாஸ் என். வி. பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விநியோகஸ்தர் / தயாரிப்பாளர் பிரசாத் பேசுகையில், '' வீர தீர சூரன் படம் சிறப்பாக தயாராகி இருக்கிறது. நடித்திருக்கும் கலைஞர்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள். அதிலும் சீயான் விக்ரம் இந்த படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்.
இங்கு நான்கு படங்கள் வெளியானாலும் ஐந்து படங்கள் வெளியானாலும் பார்த்து ரசிப்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நல்ல சினிமாவை எதிர்பார்க்கிறார்கள். இரண்டரை மணி நேரம் சினிமாவிற்காக ஒதுக்குகிறார்கள் என்றால்.. அவர்களை திருப்திப்படுத்துவது படக் குழுவினரின் கடமை. ஒரு படம் நன்றாக இருந்தால் காலைக்காட்சியில் இருந்து வேர்ட் ஆஃப் மவுத் மூலமாகவும், சமூக வலைதள பக்கத்தில் ஒரே ஒரு போஸ்ட் போட்டாலும் போதும். படம் ஹிட் ஆகிவிடும். காலை காட்சியை விட இரவு காட்சியில் நிலைமை தலைகீழாக மாறிவிடும். அந்த வகையில் :வீர தீர சூரன்' திரைப்படம் இங்கு திரையிடப்பட்டு சென்சேஸனல் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கிறோம். படத்தில் நடித்த நடிகர்களுக்கு நல்ல பெயர், புகழ் கிடைக்க வேண்டும். இந்த படத்தில் முதலீடு செய்த தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்க வேண்டும். இதற்கு ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும் '' என்றார்.
நடிகர் எஸ் ஜே சூர்யா பேசுகையில், '' அனைவருக்கும் வணக்கம். தெலுங்கிலும் சில நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். அதற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லருக்கும் இங்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
தமிழாக இருந்தாலும்... தெலுங்காக இருந்தாலும் ... கன்னடமாக இருந்தாலும் ... மலையாளமாக இருந்தாலும்... ரசிகர்கள். எந்த ஜானரிலான படங்களாக இருந்தாலும் நல்ல கன்டென்ட் உள்ள படைப்புகளுக்கு ஆதரவு தருகிறார்கள்.
இந்தப் படம் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட படம். இருந்தாலும் இது கிராமிய பின்னணியில் சொல்லப்பட்டிருக்கிறது. மார்ட்டின் ஸ்கோர்செஸி ராஜமுந்திரி கதைக்களமாக கொண்டு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ..! அப்படி இருக்கும் இந்த திரைப்படம். இயக்குநர் அருண்குமார் பெருந்தன்மையானவர் நல்ல மனிதர். திறமைசாலி.
இந்த படத்தில் 15 நிமிட நீளத்திற்கு ஒரு சிங்கிள் ஷாட் இருக்கிறது. அது இரவு நேரத்தில் வரும் காட்சி. சிங்கிள் ஷாட்டில் படமாக்க வேண்டும் என இயக்குநர் விரும்பினார். இதற்காக பத்து நாட்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஒத்திகையில் ஈடுபட்டார்கள். அதன் பிறகு நடிகர்களை வைத்து மூன்று நாட்கள் ஒத்திகையில் ஈடுபட்டார்கள். நான்காவது நாள் அந்த காட்சி படமாக்கப்பட்டது. அது கடைசி நாள் படப்பிடிப்பு. அன்று இந்த காட்சியை படமாக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருந்தோம். முதல் டேக் ஐந்து நிமிடங்களில் ஒருங்கிணைப்பு இல்லாததால் திட்டமிட்டபடி படமாக்கப்படவில்லை. அடுத்த டேக் ஒன்பது நிமிடங்கள் வரை சென்றது. அதன் பிறகு மூன்று- நான்கு- ஐந்து -ஆறு -ஏழு -என்று டேக் சென்று கொண்டே இருந்தது. ஒருங்கிணைப்பில் துல்லியம் இல்லாததால்.. இயக்குநர் எதிர்பார்த்தபடி அந்த காட்சி அமையவில்லை. மணி அதிகாலை 4 மணியை நெருங்கி கொண்டிருந்தது. மீண்டும் அனைத்தையும் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் ஆகும். திட்டமிட்டபடி காட்சியை படமாக்க முடியாதோ..! என்ற கவலையில்.. இயக்குநர் கண்களில் இருந்து கண்ணீர் வரத் தொடங்கியது. அதன் பிறகு நாங்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் சொல்லி.. தற்போது மீண்டும் முயற்சிக்கும் போது வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுத்தோம். அனைவரும் இந்த காட்சி நன்றாக வரவேண்டும் என பிரார்த்தனை செய்ய தொடங்கினோம். அதன் பிறகு சரியாக 5:00 மணிக்கு நடிக்க தொடங்கினோம். அந்த ஷாட் எந்தவித தடங்கலும் இல்லாமல் 5: 16க்கு நிறைவடைந்தது.
விக்ரம் - தென்னிந்தியா சினிமா முழுவதும் பெருமை கொள்ள வேண்டிய நட்சத்திரம். திறமையான நடிகர். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மேலும் மேலும் புதிய உயரங்களை தொட்டுக் கொண்டிருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றியதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.
இந்தப் படத்தை திரையரங்குகளில் அனைவரும் பார்த்து, நல்லதொரு ஓப்பனிங்கை உருவாக்கித் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
நடிகர் சீயான் விக்ரம் பேசுகையில், '' அனைவருக்கும் வணக்கம். படத்தைப் பற்றியும் , படத்தில் நடித்த நடிகர்களை பற்றியும் எஸ் ஜே சூர்யா விரிவாக பேசிவிட்டார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
'தூள்', 'சாமி' என மாஸாக ... ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நடித்திருக்கிறேன். தற்போது கூட மாஸாகத்தான் நடித்து வருகிறேன் . இருந்தாலும் ரஸ்டிக்காக நடிக்க வேண்டும் என விரும்பினேன். இதைத்தான் இயக்குநர் அருண்குமாரிடம் .. என்னுடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பதை போல் படம் கொடுக்க வேண்டும் என்று சொன்னேன். ரசிகர்களுக்காக அவர்கள் ரசிக்கும் படத்தை கொடுப்பதற்காக நானும், அருண்குமாரும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம்.
இது எமோஷனலான படம். அனைத்தும் உணர்வுபூர்வமாக இருக்கும். இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்கிறார் என்று சொன்னவுடன் மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் வெவ்வேறு பரிமாணங்கள் இருக்கும். நல்லவர்களாகவும் இருப்பார்கள். கெட்டவர்களாகவும் இருப்பார்கள்.
நானும், எஸ் ஜே சூர்யாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அவரது இயக்கத்தில் வெளியான 'வாலி' படமும், என்னுடைய நடிப்பில் வெளியான 'சேது' படமும் சம காலகட்டத்தில் வெளியானது. நாங்கள் இருவரும் பல விருதுகளை சமமாக வென்றோம்.
அதன் பிறகு அவர் நடிக்க வந்து விட்டார். அவருடைய நடிப்பை பார்த்தேன். ரசித்தேன். 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற போது அந்த வழியாக கடந்து சென்றேன். அப்போது அவர் மகேஷ்பாபு உடன் நடிப்பதாக சொன்னார்கள். அதன் பிறகு ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்து தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி', 'மாநாடு', 'டான்' என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். இதை பார்க்கும் போது ஹாலிவுட் நடிகர்களான ராபர்ட் டி நிரோ- அல்பசினோ - போன்ற நடிகர்கள் தான் நினைவுக்கு வரூகிறார்கள். அவருடைய நடிப்பு முழுவதும் வித்தியாசமாக இருக்கிறது. அவரிடமிருந்து நான் சில விசயங்களை கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு வசனத்திலும் தனித்துவத்தை காட்டுகிறார். அவருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.
இது ஒரு கமர்ஷியல் படம் தான் என்றாலும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் அவர்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் படமாகவும் இருக்கிறது.
இந்தப் படம் பக்கா மாஸான கமர்சியல் படம் அல்ல. ஆனால் மாஸான காட்சிகள் இருக்கிறது. கமர்சியல் எலிமெண்ட் இருக்கிறது. ஆனால் அவை நேரடியாக இருக்காது. ஆனாலும் படம் பார்க்கும் ரசிகர்களை உணர்வுபூர்வமாக தொடர்பு கொள்ளக்கூடிய படமாக இருக்கும். தெலுங்கில் அருண்குமார் இயக்கிய 'சேதுபதி' படமும், 'சித்தா' படமும் வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டு படங்களின் கலவையாக இந்த 'வீரதீர சூரன் ' இருக்கும்.
இயக்குநர் அருண்குமார் சிறந்த கதாசிரியர். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நூறு பேர் இருக்கிறார்கள் என்றால்.. அந்த நூறு பேருக்கும் ஒரு அழுத்தமான பின்னணி இருக்கும். கதைக்களம் ரியாலிட்டியுடன் இருக்கும். இப்படத்தினை டப்பிங் பேசும்போது பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு காட்சிகளையும் இயக்குநர் ரசித்து உருவாக்கியிருக்கிறார்.
தெலுங்கில் வெளிவரும் கதைகள் சிறப்பாக இருக்கிறது. கமர்சியல் படங்களை பிரம்மாண்டமாகவும், வித்தியாசமாகவும் உருவாக்குகிறார்கள். தெலுங்கு ரசிகர்கள் சின்ன பட்ஜெட் படத்தையும் கொண்டாடுகிறார்கள். பெரிய பட்ஜெட் படத்தையும் கொண்டாடுகிறார்கள். இங்கு உள்ள மக்கள் சினிமா மீதும், நட்சத்திரங்கள் மீதும் காட்டும் அன்பு அதீதமானது தனித்துவமானது.
இந்தப் படமும் நல்ல படம். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இந்த படத்தின் தொடக்கக் காட்சியை தவற விடாதீர்கள். இதற்காக சில நிமிடங்களுக்கு முன்பே திரையரங்கத்திற்குள் வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் '' என்றார்.
இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ நிதி கல்லூரியில் விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ரியா ஷிபு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் சசி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் ரியா ஷிபு பேசுகையில், '' 'வீர தீர சூரன்' படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரின் உற்சாகத்தை பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கேரளாவிற்கு 'ஆர் ஆர் ஆர்' படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக ஜூனியர் என்டிஆர்- ராஜமௌலி -ராம்சரண்- ஆகியோர் வருகை தந்தனர் அவர்கள் கேரளா முழுவதும் சுற்றுப்பயணம் செய்த போது கிடைத்த உற்சாக வரவேற்பு ... இங்கு இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
'சித்தா' படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். யூ . அருண்குமார் இயக்கத்தில் திறமை வாய்ந்த கலைஞர்களான விக்ரம் -எஸ் ஜே சூர்யா- சுராஜ்- துஷாரா ஆகியோர் நடித்திருக்கும் 'வீர தீர சூரன்' திரைப்படம் எதிர்வரும் 27ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளுக்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் '' என்றார்.
இதனைத் தொடர்ந்து திரளாக கூடியிருந்த மாணவ மாணவிகள் 'வீர தீர சூரன்' படத்தின் நட்சத்திரங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டும், அவருடைய உருவப்படங்களை பரிசாக வழங்கியும் தங்களுடைய அன்பினையும் , ஆதரவையும் உற்சாகம் குறையாமல் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். திரளாக கூடி இருந்த கல்லூரி மாணவ மாணவிகளிடத்தில் சீயான் விக்ரம் 'வீர தீர சூரன்' படத்தினை பற்றிய சிறப்பம்சங்களையும் , அனுபவங்களையும் சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டார்.
Tags: veera dheera sooran, vikram