மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ.ஜெயப்பிரகாஷ் தயாரிக்கும் படம் ‘உலகம்மை’.
‘சாதி சனம், காதல் எப்எம்’ படங்களை இயக்கிய விஜய் பிரகாஷ் இப்படத்தை இயக்குகிறார். ‘96’ படத்தில் நடித்த கௌரி கிஷன், வெற்றி மித்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர்,பிரணவ் அருள்மணி, காந்தராஜ், ஜேம்ஸ்,சாமி,ஜெயந்திஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.
நெல்லை மாவட்ட பின்னணியில் 1970-களில் திருநெல்வேலியை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான வாழ்வியல் திரைப்படமாக உருவாகி உள்ளது இப்படம்.
இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விஜய் பிரகாஷ், கல்லூரி நாட்களிலேயே சு சமுத்திரத்தின் கதைகளால் ஈர்க்கப்பட்டதாகக் கூறுகிறார். அதுவும் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ நாவல் தனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் அதையே திரைப்படமாக எடுக்க விரும்பினேன் என்கிறேன்.
உலகம்மை என்ற கிராமத்துப் பெண்ணைச் சுற்றி கதை நகர்கிறது. மாரிமுத்து நாடார் மற்றும் பலவேச நாடார் ஆகியோர் உலகம்மை மற்றும் அவரது தந்தை மாயாண்டி நாடாரை பழிவாங்குகிறார்கள். அந்தக் காலத்தில் நிலவிய சாதி அமைப்பை உலகம்மை எப்படி எதிர்க்கிறாள் என்பதை இப்படம் சித்தரிக்கிறது.
சமூக வாழ்வியல் திரைப்படமான உலகம்மையின் முக்கிய அம்சங்களில் இளையராஜா இசையமைத்த நான்கு பாடல்களும் பின்னணி இசையும் அடங்கும். பேராசிரியர் குபேந்திரன் வசனம் எழுதியுள்ளார், கே வி மணி ஒளிப்பதிவு செய்துள்ளார், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பாளராகவும் வீர சிங்கம் கலை இயக்குநராகவும் பங்காற்றியுள்ளனர். பாடல் வரிகளை இளையராஜா, முத்துலிங்கம், சரவணன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் இளையராஜா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
மே மாதம் உலகம்மை திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.