இந்திய சினிமாவில் கதை சொல்லும் முறையிலும், திரைப்பட உருவாக்கத்திலும் தொடர்ந்து புதுமைகளை அறிமுகப்படுத்திய முன்னோடி இயக்குநர்களில் முக்கியமானவர் சிங்கீதம் சீனிவாச ராவ்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள அவர், 70 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரைப்பயணத்தில் பல்வேறு வகை கதைகளையும், வித்தியாசமான திரைப்பட முயற்சிகளையும் கையாண்டவர். வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அக்டோபர் 3-ம் தேதி காலமானார். அவருக்கு 95 வயது.
1931-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் குடூரில் பிறந்த சிங்கீதம் சீனிவாச ராவ், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் படித்தவர். சிறுவயது முதலே நாடகம் மற்றும் இசையில் ஆர்வம் கொண்டிருந்த அவர், சினிமா மீதான ஈர்ப்பால் புகழ்பெற்ற இயக்குநர் கே.வி.ரெட்டியிடம் உதவி இயக்குநராக பணியாற்றத் தொடங்கினார். ‘மாயாபஜார்’, ‘ஜகதேக வீருனி கதா’ உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு திரைப்பட உருவாக்கத்தின் பல்வேறு அம்சங்களை கற்றுக்கொடுத்தது.
1972-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படமான ‘நீதி நிஜாயிதி’ மூலம் இயக்குநராக அறிமுகமான சிங்கீதம் சீனிவாச ராவ், தனது முதல் தமிழ் படமாக 1974-ம் ஆண்டு ‘திக்கற்ற பார்வதி’யை இயக்கினார். சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்ட இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. இதன் மூலம் தமிழ் சினிமாவிலும் தனது தனித்துவமான இயக்குநர் முத்திரையை பதித்தார்.
கமல்ஹாசனுடன் இணைந்த பிறகு சிங்கீதம் சீனிவாச ராவின் திரைப்பயணம் இன்னொரு முக்கியமான கட்டத்தை அடைந்தது. ‘ராஜபார்வை’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘பேசும் படம்’, ‘காதலா காதலா’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ என கமல்ஹாசனின் பல்வேறு பரிசோதனை முயற்சிகளுக்கு இயக்குநராக துணை நின்றார். குறிப்பாக ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் கமல்ஹாசனை அப்பு என்ற குள்ளமான கதாபாத்திரத்தில் உருவாக்கிய விதமும், ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் ஒரே நடிகரை பல கதாபாத்திரங்களில் கையாண்ட விதமும் அவரது இயக்கத் திறமைக்கு எடுத்துக்காட்டுகளாக அமைந்தன.
சிங்கீதம் சீனிவாச ராவின் மிக முக்கியமான பரிசோதனை முயற்சிகளில் ஒன்று ‘புஷ்பக விமானம்’. தமிழில் ‘பேசும் படம்’ என்ற பெயரில் வெளிவந்தது. வசனங்கள் இல்லாமல் உருவாக்கப்பட்ட இந்தப் படம், மொழியின் எல்லைகளைக் கடந்து காட்சிகளின் மூலமாகவே கதையை சொல்ல முடியும் என்பதை நிரூபித்தது. கன்னடத்தில் உருவான இப்படத்துக்கு 1987-ம் ஆண்டுக்கான சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
அதேபோல், தெலுங்கு சினிமாவில் அறிவியல் புனைகதை மற்றும் டைம் டிராவல் கதைக்களத்தை பிரம்மாண்டமான முறையில் கையாண்ட ‘ஆதித்யா 369’ அவரது மற்றொரு முக்கியமான படைப்பாகும். ‘பைரவ தீபம்’ போன்ற படங்கள் மூலம் ஃபேண்டஸி ஜானரிலும் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தினார். கன்னட நடிகர் ராஜ்குமாருடனும் அவர் இணைந்து பல வெற்றிப் படங்களை வழங்கினார்.
சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் தமிழில் வெளியான ‘மகளிர் மட்டும்’, ‘சின்ன வாத்தியார்’, ‘காதலா காதலா’, ‘லிட்டில் ஜான்’ உள்ளிட்ட படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. ‘லிட்டில் ஜான்’ படத்தை தமிழ், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் உருவாக்கியதும் அவரது பரிசோதனை மனப்பான்மைக்கு மற்றொரு சான்றாக அமைந்தது.
இயக்குநராக மட்டுமல்லாமல் திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என சினிமாவின் பல துறைகளிலும் தனது பங்களிப்பை வழங்கியவர் சிங்கீதம் சீனிவாச ராவ். இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், நந்தி விருதுகள், கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள அவர், 2011-ம் ஆண்டு இந்திய திரைப்படக் கூட்டமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருதாலும் கவுரவிக்கப்பட்டார்.
90 வயதைக் கடந்த பிறகும் சினிமா மீதான தனது ஆர்வத்தை அவர் கைவிடவில்லை. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக களமிறங்கிய அவர், 94 வயதில் ‘சிங் கீதம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தை இயக்கினார். பாடல்களின் வழியாகவே கதை சொல்லும் வித்தியாசமான முயற்சியாக உருவான இப்படம் 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. 94 வயதில் 77 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தது அவரது சினிமா மீதான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.
ஒரே மாதிரியான கதைகளை மீண்டும் மீண்டும் உருவாக்காமல், ஒவ்வொரு படத்திலும் புதிதாக ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணித்தவர் சிங்கீதம் சீனிவாச ராவ். நகைச்சுவை, சமூகப் பிரச்சினைகள், ஃபேண்டஸி, அறிவியல் புனைகதை, வரலாறு, சுயசரிதை, மியூசிக்கல் என பல்வேறு ஜானர்களில் தனது முத்திரையை பதித்த அவரது படைப்புகள், இந்திய சினிமாவில் பரிசோதனை முயற்சிகளுக்கான பாதையை விரிவுபடுத்தின.
திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, புதிய சிந்தனைகளையும் புதிய காட்சியனுபவங்களையும் உருவாக்குவதற்கான களம் என்பதை தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் நிரூபித்த சிங்கீதம் சீனிவாச ராவ், தனது இறுதிப் படைப்பான ‘சிங் கீதம்’ வரை அந்த புதுமை தேடும் பயணத்தை தொடர்ந்தார். அவரது மறைவு இந்திய சினிமா உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.