‘கட்சி சேரா’ மற்றும் ‘ஆச கூட’ ஆல்பம் புகழ் சாய் அபயங்கர், லோகேஷ் கனகராஜ் எழுத்தில். ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
‘ரெமோ’, ‘சுல்தான்’ படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இசையமைப்பாளர் ஆக அறிமுகமாவது குறித்து சாய் அபயங்கர் கூறுகையில்,
“இதை விட சிறந்த அறிமுகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இந்தத் தருணத்தில் உற்சாகமும் பொறுப்புகளும் எனக்கு அதிகமாகியிருக்கிறது. இந்த சிறப்பான வாய்ப்பை வழங்கிய பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் சார், லோகேஷ் கனகராஜ் சார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி சார் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் ‘பென்ஸ்’ போன்ற படத்திற்கு இசையமைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு நான் ரசிகன். அவரின் யுனிவர்சில் இசையை உருவாக்குவது எனக்கு உண்மையிலேயே பெரிய கனவு. ராகவா லாரன்ஸின் திரைப்படங்களில் சிறந்த பாடல்கள் மற்றும் நடனத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். சிறந்த இசையை வழங்குவதற்கான எனது பொறுப்பு அதிகமாகி இருக்கிறது. இந்த படத்தில் என்னை தேர்வு செய்த இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனுக்கும் நன்றி” என்றார்.
சாய் அபயங்கர் சுயாதீனப் படல்களை உருவாக்குவதைத் தாண்டி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அவர் நேரடி இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், ஜி.வி.பிரகாஷ் குமார், சி. சத்யா ஆகிய இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
‘பென்ஸ்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.