டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிப்பில் நாளை ஜனவரி 10ல் வெளியாக உள்ள படம் ‘பராசக்தி’.
படம் பற்றி சிவகார்த்திகேயன் கூறுகையில்,
“பராசக்தி’ கதையுடன் சுதா கொங்காரா என்னை அணுகிய போது கலவையான உணர்வுகள் எனக்குள் இருந்தது. இந்தப் படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற உற்சாகம் இருந்தாலும், அவரது அற்புதமான திரைக்கதைக்கு நான் நியாயம் செய்ய முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது.
படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த பொறுப்புணர்வுடன் அணுகினேன். என் வழக்கமான இமேஜைத் தாண்டி, வேறொரு பரிமாணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இயக்குநராக சுதா கொங்காரா என்னிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ரசிகர்களும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ரவி மோகன் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கவே இல்லை. இந்தக் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது எனக்கு நம்ப முடியாத ஆச்சரியம்தான். செட்டில் அனைவரிடமும் எளிமையாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார். நீண்ட காலமாக அவரை திரையில் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால், நேரில் அவரின் பணிவும் நேர்மறை அணுகுமுறையும் எனக்கு பெரும் உற்சாகம் கொடுத்தது. இந்தப் படத்தில் அதர்வா முரளியின் நடிப்பு அவரது ரசிகர் வட்டத்தை இன்னும் அதிகமாக்கும்.
ஸ்ரீலீலாவுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படம் வெளியான பிறகு அவரின் நடிப்பு தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். நம் இந்திய வரலாற்றில் அழியாத ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி’. இந்த படம் சிறப்பான முழுமையான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும்.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் ஆதரவு இல்லாமல் ’பராசக்தி’ இல்லை. ஒவ்வொரு காட்சியையும் உயர்ந்த தரத்துடன் உருவாக்க எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்ததற்காக அவருக்கு நன்றி,” என்றார்.