மத்திய அரசு, இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாம் மொழியாக இந்தி மொழியைப் பயிற்றுவிக்கும் வரைவு திட்ட அறிக்கை ஒன்றினால் கடந்த சில நாட்களாக கடும் சர்ச்சை எழுந்தது.
தமிழ்நாட்டில் பலரும் இந்தித் திணிப்பிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டார்கள்.
ஆஸ்கர் விருது வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் நேற்றே ‘பஞ்சாப்பில் பரவும் தமிழ்’ என ஒரு பஞ்சாப் இளைஞர் ‘மரியான்’ படப் பாடலைப் பாடிய வீடியோவை அவருடைய டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். 2018ல் வெளியான அந்த வீடியோவை நேற்று ரகுமான் ஷேர் செய்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்தி எதிர்ப்புக்காக தன் கருத்தை மறைமுகமாக வலியுறுத்தவே ரகுமான் அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார் என ரசிகர்கள் அவரைப் பாராட்டினார்கள்.
இன்று வரைவு திட்ட அறிக்கையில் இடம் பெற்ற இந்தி பயிற்றுவிப்பு நீக்கப்பட்டு வரைவு திட்ட அறிக்கை மாற்றியமைக்கப்பட்டது. அந்த செய்தி வெளிவந்ததும், உடனடியாக தன் மகிழ்ச்சியை டுவிட்டரில் பகிர்ந்தார் ரகுமான்.
https://twitter.com/arrahman/status/1135427893557776384
ரகுமானின் இந்த தாய்மொழிப் பாசத்திற்கு தமிழர்கள் பலரும் பாராட்டும், வாழ்த்துகளும் தெரிவித்து வருகிறார்கள். பல சினிமா பிரபலங்கள் இந்தித் திணிப்பு பற்றி வெளிப்படையாக கருத்து கூறாத நிலையில், ரகுமானின் நேற்றைய, இன்றைய கருத்துப் பரிமாற்றம் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
‘ஆளப் போறான் தமிழன்’ என்று அசத்தலான பாடலைக் கொடுத்தவராயிற்றே…எத்தனை மொழிகளுக்குப் போனாலும், நாடுகளுக்குப் போனாலும் தன் மொழி, தன் இனம் என ரகுமானின் உணர்வு வெளிப்படுவதாக தமிழர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.