‘கீ’ இயக்குனர் காலீஸ்-ஐப் பாராட்டிய விஷால்

குளோபல் இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் காலீஸ் இயக்கத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைப்பில் ஜீவா, நிக்கி கல்ரானி, அனைகா சோதி மற்றும் பலர் நடித்துள்ள கீ படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் கே.வி. ஆனந்த் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் காலீஸ் பேசியதாவது,

“இப்படத்தைத் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர் மைக்கெல் ராயப்பன் சாருக்கு என் முதல் நன்றி. பல வருடமா இப்படத்த தயாரிக்க யாருமே முன் வரல. ஒரு அறைக்குள் அடைந்து கிடந்தேன். இறுதியா மைக்கல் சார் தயாரிக்க ஒத்துக்கிட்டாரு. ஜீவா, நிக்கி கல்ரானி மற்றும் அனைவரும் நன்றாக ஒத்துழைத்து நடித்துள்ளார்கள். தயாரிப்பாளர்கள் எங்களைப் போல இளம் இயக்குனர்களுக்கும் வாய்ப்பளித்து உதவுங்கள்,” என்றார்.

படத்தின் நாயகன் ஜீவா பேசியதாவது,

“படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். நிக்கி கல்ரானியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படத்திற்கு விஷால் சந்திரசேகர் அருமையாக இசையமைத்துள்ளார். அருமையான கதையைக் கொண்டது இத்திரைப்படம். தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக அமையும். தயாரிப்பாளர் மைக்கெல் ராயப்பனுக்கும் மற்றும் இயக்குனர் காலீஸ் அவர்களுக்கும் நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.”

விழாவில் நடிகை நிக்கி கல்ரானி பேசுகையில்,

“இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் அவர்களுக்கும் , காலீஸ் அவர்களுக்கும் நன்றி. ஜீவா மற்றும் பலருடன் இப்படத்தில் நடித்துள்ளேன், மகிழ்ச்சியாக உள்ளது. சமூகத்திற்கு நல்ல கருத்தைத் தரும் படமாக அமையும். தற்போது சமூகத்தில் இருக்கும் பெண்களில் ஒருவராக நடித்துள்ளேன். விஷால் சூப்பரா மியுசிக் போட்டுக்காரு,” என்றார்.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசுகையில்,

“இப்படத்தில் இசையமைக்க என்னை பரிந்துரை செய்த R.J பாலாஜி அவர்களுக்கு நன்றி. வாய்ப்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி. பாட்டு எல்லாமே அருமையாக வந்துள்ளது. உங்க அனைருக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் அமையும். பாடல்களை அழகாக எழுதிய தாமரை, கார்க்கி, அமுதவன், சுபு ஆகியோருக்கு என் நன்றிகள்,” என்றார்.

கோவிந்த் பத்மசூரியா பேசியதாவது,

“தமிழில் எனக்கு இது முதல் படம். நான் ஜீவா படங்கள் நிறைய பாத்துருக்கேன். நான் அவருடைய ரசிகன். படப்பிடிப்பு துவங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே டிரைலர் ரெடி பண்ணிட்டாங்க. நான் ரொம்பவே வியந்தேன். படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனருக்கும், தயாரிப்பயாளருக்கும் எனது நன்றி. விஷால் மிக அருமையாக மியூசிக் போட்டுள்ளார்,” என்றார்.

R.V உதயகுமார் பேசுகையில்,

“தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு நல்ல கருத்தைத் தரும் படமாக ‘கீ’ அமையும். ப்ளூ வேல் கேம் மாதிரி ஒரு ஆபத்தான விளையாட்டை எதிர் கொள்வதால் ஏற்படும் விளைவுகளை இத்திரைப்படம் தெரிவிக்க உள்ளது. இசையமைப்பாளர், இயக்குனர் மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்,” என்றார்.

இயக்குனர் கே.வி ஆனந்த் பேசும் போது,

“இசை வெளியீட்டு விழாவிற்க்கு என்னை அழைத்ததற்கு நன்றி. ஜீவா திறைமையுள்ள நடிகர், விஜய் சேதுபதியும் அப்படித்தான். ஜீவா பிஞ்சிலேயே பழுத்தவர். விஜய் சேதுபதி பழுத்து பிஞ்சானவவர். பாடல்களும் காட்சியமைப்பும் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகருக்கும், இயக்குனர் காலீஸ் அவர்களுக்கும் என் வாழ்த்துகள். தைரியமாக படத்தைத் தயாரிக்க முன் வந்த மைக்கல் ராயப்பனுக்கும் எனது வாழ்த்துகள். ஒளிப்பதிவாளர் அபிநந்தன் மிகச் சிறப்பான வேலையை செய்துள்ளார்,” எனப் பாராட்டினார்.

நடிகை சுகாசினி பேசுகையில்,

“38 வருடங்களுக்கு முன்பு படத்தில் நடிக்கும் போது எப்படி ஒரு படபடப்பு இருந்ததோ அதேபோல் தற்போது இப்படத்தில் நடிக்கும்போதும் இருந்தது. பழைய காலங்களில் பெரியவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டோம். தற்போது காலீஸ் போன்ற அறிமுக இயக்குனர்களான சிறியவர்களிடமும் கற்றுக் கொள்கிறோம். படத்தில் அனைவருடனும் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

விஜய் சேதுபதி பேசுகையில்,

“இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் பிரமாண்டமா இருக்கு .நண்பன் ஜீவாவிற்கு எனது வாழ்த்துக்கள். நிக்கி கல்ராணி மற்றும் இசையமைப்பாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இயக்குனர் காலீஸ் அவர்களின் முதல் படத்தின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் அவர்கள் மிகப் பெரிய வெற்றியடைந்து வளர வேண்டும்,” என்றார்.

விஷால் பேசுகையில்,

“படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் பார்த்தேன். மிக அற்புதம் ஆக இருக்கு. டிரைலர் பார்த்தேன், ரொம்ப இம்ப்ரசிவ்வா இருந்தது, வாழ்த்துகள் காலீஸ். இப்படிப்பட்ட இயக்குனர்களைப் பார்க்கும் போது எப்படியாவது அடுத்த படத்துல பிடிச்சிக்கணும்னு நினைப்போம். அந்த வகையில நம்பிக்கைத் தரக் கூடிய இயக்குனரா வரப் போறாருன்னு நினைக்கிறேன். சினிமா டிக்கெட் புக்கிங் மட்டும் அட்வான்ஸ் புக்கிங் இல்லை, இந்த மாதிரி நல்ல கலைஞர்களுக்கும் அட்வான்ஸ் புக்கிங் உண்டு. ஜீவாவுக்கு ஒரு நல்ல படம் அமையும் போது அதை கைதட்டி பார்க்கிற முதல் நபரா நான் இருக்கேன். ஜீவா, மிகத் திறமையான நடிகர், ஒரு வெர்சடைல் ஆக்டர், இந்த ‘கீ’ படம் அவருக்கு முக்கியமான படமா அமையும். படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்,” என்றார்.

கீ திரைப்படம் பிப்ரவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது.

Read Previous

கீ – டிரைலர்

Read Next

Achamillai Achamillai – Official Teaser

Most Popular