‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் அடுத்த படம் ‘காளி’.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘அரும்பே’ என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் கடந்த வாரம் ரிலீஸ் செய்தார். இப்பாடலின் வீடியோவும் ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் ரசிகர்களின் இலவச சட்டபூர்வமான டவுன்லோடிற்கு Vijayantony.com என்ற இணையதளத்திலும் உள்ளது.
இந்த ‘அரும்பே’ பாடலை ‘மெர்சல்’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதிய பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
இது குறித்து பாடலாசிரியர் விவேக் பேசுகையில்,
”விஜய் ஆண்டனி சாரின் இசையில் நான் எழுதியிருக்கும் முதல் பாடல் இது. அவருடன் பணிபுரிந்தது அருமையான அனுபவமாகும். கிருத்திகா அவர்களுடன் இதற்கு முன்பு ஒரு மியூசிக் வீடியோவிற்காக பணிபுரிந்திருந்தாலும் ஒரு படத்திற்காக அவருடன் பணிபுரிவது இது தான் முதல் முறை.
இந்த படத்திற்காக விஜய் ஆண்டனி சார் மிகவும் அசத்தலான பாடல்களை தந்துள்ளார். இசையமைப்பாளராக அவர் தந்துள்ள அருமையான பாடல்களின் வரிசையில் இப்படப் பாடல்கள் நிச்சயம் இடம்பெறும். என்னை கவர்ந்த அவரது சிறந்த பாடல்களிலும் இப்படப் பாடல்கள் நிச்சயம் இடம்பெறும்.
விஜய் ஆண்டனி சாரும் கிருத்திகா அவர்களும் எனக்கு தந்த சுதந்திரம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. எனது வரிகளை படித்ததும் விஜய் ஆண்டனி சார் எனக்கு போன் செய்து பாராட்டினார். இந்த பாடலும் இந்தப் படமும் நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களால் ரசிக்கப்பட்டு பாராட்டப்படும் என நான் நம்புகிறேன்,” என்றார்.
விஜய் ஆண்டனி பிலிம் பார்ப்பரேஷன் சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் படம் ‘காளி’. இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
யோகி பாபு, நாசர், R K சுரேஷ், வேல ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ், மதுசூதன், சித்ரா லக்ஷ்மன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவில் , லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பில் , சக்தி வெங்கட்ராஜின் கலை இயக்கத்தில் , சக்தி சரவணனின் சண்டை இயக்கத்தில் , பிருந்தாவின் நடன இயக்கத்தில் உருவாகி வரும் ‘காளி’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது.
மார்ச் 30ம் தேதி ‘காளி’ உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது.