ரஜினிகாந்த் கடந்த பல வருடங்களாகவே ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் அடுத்தடுத்து ‘2.0, காலா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.
‘2.0’ படத்தை கடந்த மாதம் 25ம் தேதி வெளியிட முதலில் திட்டமிட்டார்கள். ஆனால், திட்டமிட்டபடி இறுதிக் கட்டப் பணிகள் முடிவடையாததால் படத்தை ஏப்ரல் மாதம் 27ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்கள். கிராபிக்ஸ் காட்சிகள் முடிவடைய இன்னும் தாமதம் ஆவதால் படமும் மேலும் தள்ளிப் போகலாம் என்று கடந்த சில வாரங்களாகவே பேச்சு இருந்தது. அதன் காரணமாக, இப்போது படம் மேலும் சில மாதங்கள் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பா. ரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் வேலைகள் முடிவடைந்துவிட்டன. அதன் பின்னணி இசை வேலைகளை படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ நாராயணன் சமீபத்தில் ஆரம்பித்துவிட்டாராம். இன்னும் ஒரு மாதத்திற்குள் அவர் இந்த வேலையை முடித்துவிட்டால் ‘காலா’ படத்தின் வேலைகள் முழுவதும் முடிந்துவிடும். அதனால், ‘2.0’ படத்திற்கு முன்பாக ‘காலா’ படத்தை வெளியிடலாம் என்று யோசித்துள்ளார்களாம். அனேகமாக, ‘2.0’ படத்தின் வெளியீட்டுத் தேதி என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 27ம் தேதியையோ அல்லது தமிழ்ப் புத்தாண்டு அன்றோ ‘காலா’ படம் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அப்படியென்றால் ‘2.0’ படம் எப்போது வெளிவரும் ?. அமெரிக்காவில் நடக்கும் கிராபிக்ஸ் வேலைகள் முடிந்த பிறகே அது தெரிய வரும் என்கிறார்கள்.