காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’.
கடந்த வாரம் வெளியான ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம் பெற்ற ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை இயக்கிய ஸ்ரீதர் வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, ‘ஏமாலி, காதல் கண் கட்டுதே ’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் ஐந்து நபர்களின் கூட்டு முயற்சியால் உருவாகி இருக்கிறது. அத்துடன் இந்த ஐந்து தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் ஸ்ரீதர் வெங்கடேசன்.
‘என் பெயர் ஆனந்தன்’ படமும் முழுநீள த்ரில்லராகவே உருவாகியுள்ளது. த்ரில்லருக்கென்றே உள்ள வழக்கமான கதைக் களத்தைத் தேர்வு செய்யாமல் சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாடகம், தெருக்கூத்து கலைகளை பின்னணியாக கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தப் படம் தமிழையும், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுதும் இந்தக் கதை குறித்த தேடல், ஆராய்ச்சியில் ஈடுபட்ட இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன், இந்தப் படத்தை த்ரில்லர் பாணியில் உருவாக்கியது நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்குமாம்.
தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக ஒரு புது முயற்சியாக க்ளைமாக்சுக்கு சற்று முன்பாக 12 நிமிடங்கள் கொண்ட பாடல் காட்சி இப்படத்தில் இடம் பெறுகிறது. வழக்கமான பாடல் ( காதல் பாடல் ) போல் இல்லாமல் உணர்வு பூர்வமான பாடலாக இருக்கும். படத்தின் உயிர் நாடியாக இருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களுக்கு வெவ்வேறு உணர்வுகளைக் கடத்தும். மேலும் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு படத்தின் ஒவ்வொரு கேரக்டரையும் உருவாக்கியுள்ளாராம் இயக்குனர் ஸ்ரீதர்.
‘சீமைத்துரை, நெடுநல்வாடை’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜோஸ் பிராங்க்ளின் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மனோராஜா ஒளிப்பதிவு செய்ய, விஜய் ஆண்ட்ரூஸ் படத் தொகுப்பை கவனிக்கிறார்.
ஹாலிவுட் படங்களில் பிரபல திரைக்கதை ஆலோசகராகப் பணியாற்றும் மைக் வில்சன் என்பவருடன் கலந்து விவாதித்து புதிய பாணியிலான திரைக்கதையை இப்படத்திற்காக உருவாக்கி உள்ளார்கள்.
இந்தப் படம் முடிவடைந்த நிலையில் படத்தைப் பார்த்த சிலர், இந்தப்படம் வெளியாகும்போது, ‘அருவி’ படம் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என பாராட்டியுள்ளார்களாம்.
மதுரை, திருவண்ணாமலை மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்..
இறுதிக் கட்டத்தில் இருக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.