ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘காலா, 2.0’ ஆகிய படங்களின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்பே இணையங்களில் லீக் ஆனது. அதிலும் ‘2.0’ படத்தின் டீசரை மிகப் பிரம்மாண்டமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதை யாரோ திருட்டுத்தனமாகப் பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டுவிட்டனர். மிகவும் மிரட்டலாக அமைந்திருந்த அந்த டீசரைப் பார்த்தவர்கள் பிரமித்துப் போனார்கள். தமிழ்ப் படமா இது என்றும் ஆச்சரியப்பட்டார்கள்.
‘லீக்’ ஆன டீசரைப் பலரும் பார்த்துவிட்டதால், அதிகாரப்பூர்வமாக வெளியிடும் போது அந்த லீக் ஆன டீசரை வெளியிட வேண்டாமென படத்தின் இயக்குனர் ஷங்கர் முடிவு செய்துள்ளாராம். முற்றிலும் வேறு காட்சிகள் அடங்கிய டீசர்தான் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்கிறார்கள்.
மேலும், ‘காலா’ படத்துடன் ‘2.0’ டீசரையும் சேர்த்து திரையிட திட்டமிட்டிருந்தார்களாம். தற்போது டீசர் லீக் ஆனதால், வேறு டீசரை அதற்குள் தயாரித்து விட முடியுமா என்று பார்த்து வருகிறார்களாம். கிராபிக்ஸ் கம்பெனி உருவாக்கிக் கொடுத்துவிட்டால், ‘2.0’ டீசர் ‘காலா’ படத்துடன் சேர்ந்து திரையிடப்படலாம்.