தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய படங்களின் வெளியீடு நிறுத்தம், படப்பிடிப்பு நிறுத்தம், தியேட்டர்கள் வேலை நிறுத்தம் என ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகமும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.
டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் கட்டணம், தியேட்டர்களில் அதிக டிக்கெட், பார்க்கிங் கட்டணம், உணவுப் பொருடகள் கட்டணம், பைரசி என பல்வேறு பிரச்சினைகளால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
“நடந்து கொண்டிருப்பதை ஸ்டிரைக் என்று சொல்ல முடியாது. தமிழ் சினிமாவை புதுப்பிக்க, திருத்தங்கள் செய்ய, புத்துணர்ச்சி அடைய வைக்க நாங்கள் எடுத்துள்ள முடிவு என்று சொல்லலாம்,” என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்திருந்தார்.
இமயமலையிலிருந்து நேற்று சென்னை திரும்பி பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் சினிமா ஸ்டிரைக் பற்றி தெரிவித்துள்ள கருத்து திரையுலகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
“நான் எப்பவுமே சொல்லிக் கொண்டிருக்கிறேன். வேலை நிறுத்தம் மட்டும் செய்யக் கூடாது. அதை எவ்வளவு சீக்கிரமோக முடிக்க வேண்டுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும், எல்லோரும் திரும்ப வேலைக்குப் போகச் செய்ய வேண்டும்,” எனக் கூறினார்.
சினிமா ஸ்டிரைக்குக்கு எதிரான இந்தப் பேச்சு திரையுலகத்தினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவர்களது படப்பிடிப்புகள், வெளியீடுகள் அனைத்தையும் தள்ளி வைத்திருக்க ரஜினிகாந்த் இப்படி பேசிவிட்டாரே என நேற்றிலிருந்தே பரபரப்பாகப் பேசி வருகின்றனர்.
சிறிய தயாரிப்பாளர்களே சீர்திருத்தம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், ரஜினி போன்ற முன்னணி நடிகர் இப்படி பேசியிருப்பது பலரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
நாம் விசாரித்த போது, ‘காலா’ படம் ஆரம்பித்த போதே ஸ்டிரைக் என்றார்கள். அதனால், அதன் படப்பிடிப்பு கொஞ்சம் பாதிக்கப்பட்டது. இப்போது படத்தை ஏப்ரல் 27ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ள நிலையில் மீண்டும் ஸ்டிரைக் அறிவித்துள்ளதால், ‘காலா’ வெளியீடு தள்ளிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதை மனதில் வைத்தே ரஜினிகாந்த் தற்போது சினிமா ஸ்டிரைக்கிற்கு எதிராகப் பேசியிருக்கிறார் என்கிறார்கள்.
இருந்தாலும், ரஜினியின் பேச்சு குறித்து தயாரிப்பாளர் சங்கத்தினரோ, மற்ற திரையுலகத்தினரோ இன்னும் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.