தமிழ்த் திரையுலகத்தில் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே தற்போது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
விபிஎப் கட்டணம், டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் அதிக கட்டணம், தியேட்டர்களின் முறையற்ற வசூல் கணக்கு, நடிகர்களின் அதிக சம்பளம் உள்ளிட்ட பல விஷயங்களை இந்த வேலை நிறுத்தம் மூலம் மாற்றி அமைக்க தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
அதற்காக பெப்சி சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவற்றுடன் தயாரிப்பாளர் சங்கம் பேசி வருகிறது.
நேற்று நடிகர் சங்கத்துடன் நடந்த பேச்சு வார்த்தையில் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து இனி நடிகர்களின் உதவியாளர்களுக்கு பெப்சி கணக்கின்படிதான் சம்பளம் வழங்க முடியும் என்று தீர்மானமாக சொல்லிவிட்டார்கள்.
சில நடிகர், நடிகைகள் மேக்கப் உதவியாளர், ஆடை உதவியாளர், ஹேர்ஸ்டைல் உதவியாளர் என கூடவே பலரையும் அழைத்து வருவார்கள். அவர்களுக்கும் நட்சத்திர ஹோட்டல் ரூம், தனி சம்பளம் ஆகியவற்றையும் தயாரிப்பாளர்களிடமிருந்து பெறுவதே வழக்கமாக இருந்து வந்தது.
இப்போது, அவற்றை நாங்களே கொடுத்துக் கொள்கிறோம் என சூர்யா முதலில் அறிவித்துவிட்டார். அடுத்து விஷால், கார்த்தி ஆகியோரும் அதையே செய்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.
அவர்களைத் தொடர்ந்து இன்னும் யார் யாரெல்லாம் இந்த சம்பளக் குறைப்புக்கு சம்மதிக்கப் போகிறார்கள் என தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் மூலம் பல லட்சங்கள் தயாரிப்பாளருக்கு மிச்சமாகும்.