ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தின் இயக்குனருக்கு அப்படத்தின் நாயகன் ஏதாவது பரிசளித்து கௌரவிப்பார். அந்தக் காலத்தில் வளர்ந்து வரும் நேரத்தில் தனக்காக வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர்களுக்கு கார் வாங்கி பரிசளிப்பதை அஜித் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
எஸ்.ஜே. சூர்யா, எ.ஆர்.முருகதாஸ், சரண் ஆகியோர் அஜித்திடம் கார் பரிசாகப் பெற்றவர்களில் சிலர். அந்த விஷயத்தை பல வருடங்களுக்குப் பிறகு சூர்யா பின்பற்றி வருகிறார்.
பாண்டிராஜ், ஹரி, விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கார் வாங்கி பரிசளித்தார் சூர்யா. சமீபத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனுக்கு கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார். அதை, சூர்யாவின் நண்பரும், தயாரிப்பாளருமான ராஜசேகர் பாண்டியன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதைப் பற்றி தயாரிப்பாளர் சசிகாந்த் சமீபத்தில் ஒரு பேட்டியில் கிண்டலடித்திருக்கிறார். 2017ம் ஆண்டில் வெளியான படங்களில் உண்மையிலேயே வெற்றி பெற்ற ஒரே படமான ‘விக்ரம் வேதா’ படத்தைத் தயாரித்தவர் சசிகாந்த்.
“சில சமயங்களில் தயாரிப்பாளர்களும் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள். ஒரு படம் வெற்றியடைந்தால் அதை வீட்டிற்குள் கொண்டாடவேண்டும். இரண்டு மூன்று வருடங்கள் கஷ்டப்பட்டு, ஒன்றாக உழைத்து செயல்பட்டு, அது வெற்றியடைந்தால் அப்போது கொண்டாடலாம். ஆனால், தவறாக செய்வதுதான் பிரச்சினை. ஒரு முன்னணி நடிகர் இயக்குனருக்கு கார் பரிசளித்தார். அது பின்னர் வழக்கமாகிவிடும். நான் 12 படங்களை எடுத்திருக்கிறேன். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான வெற்றியைக் கொடுத்தது. இந்த் துறையில் வெற்றிக்காக மிகப் பெரும் அழுத்தம் ஏற்படுகிறது,” என சசிகாந்த் கூறியிருந்தார்.
அப்படிப் பேசிய சசிகாந்திற்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார் ராஜசேகர் பாண்டியன். “இயக்குனருக்கும், நடிகர்களுக்கும் சம்பளத்தை முழுமையாக்க் கொடுக்கத் தவறிய ஒரு தயாரிப்பாளர் பரிசுகள் பற்றி பேசுகிறார். முதல்ல சம்பளத்தைக் கொடுத்துட்டு அப்புறம் பேசலாமே” எனக் கூறியிருக்கிறார்.
இருவருமே யாருடைய பெயரையும் குறிப்பிட்டு விமர்சித்துக் கொள்ளவில்லை. ஆனால், இருவருக்குமே யாரைக் குறை சொல்கிறோம் என்பது புரிந்திருக்கிறது.
இருவரது மோதலிலும் சில உண்மைகள் ரசிகர்களுக்குத் தெரிய வந்துள்ளது.