விக்னேஷ் சிவன் இதுவரை அவர் இயக்கிய படங்களுக்காக மக்களிடம் சென்று சேரவில்லை. அவர் எதற்காக மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறார் என்பது அவருக்கே நன்றாகத் தெரியும். அவர் இதுவரை இயக்கிய மூன்று படங்களில் ‘நானும் ரௌடிதான்’ மட்டும்தான் உருப்படியான படம். ஆனால், மற்றவர்களை வம்புக்கிழுப்பதில் கொஞ்சமும் சளைத்தவரில்லை விக்னேஷ் சிவன்.
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம் பெற்ற ‘சொடக்கு…’ பாடலின் லிரிக் வீடியோ, ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆளப் போறான் தமிழன்….’ பாடலை விட பார்வைகள் எண்ணிக்கையைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. அதனால், நேற்று ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன் தேவையில்லாமல் ஏ.ஆர்.ரகுமானை வம்புக்கிழுத்துள்ளார்.
நன்றி தெரிவித்து அவர் பதிவிட்ட டிவீட்டில், ‘எல்லாப்புகழும் சூர்யா மற்றும் அனிருத்திற்கே’ என குறிப்பிட்டிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் எந்த சாதனை புரிந்தாலும் ‘எல்லாப்புகழும் இறைவனுக்கே’ என சொல்வது வழக்கம். அதைக் கிண்டலடிக்கும் விதமாக விக்னேஷ் சிவன் பதிவிட்டிருப்பது ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.
https://twitter.com/VigneshShivN/status/981184900903522304
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘மெர்சல்’ படத்தின் பாடல் சாதனையைத்தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பாடல் முறியடித்துள்ளது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை 15 கோடிக்கு நஷ்டப்படுத்திக் கொடுத்துவிட்டு, அதற்காக ஒரு காரையும் பரிசாகப் பெற்றுக் கொண்டு, இப்போது ஆஸ்கர் விருது பெற்ற நாயகனை மறைமுகமாக விக்னேஷ் சிவன் கிண்டலடித்திருப்பது அவருக்குள் இருக்கும் இன்னொரு முகத்தைக் காட்டுகிறது. அவருக்கு ரகுமான் மேல் அப்படி என்ன கோபமோ ?, ஒருவேளை படத்திற்கு இசையமைக்கக் கேட்டு அவர் மறுத்திருக்கலாம் அல்லது விஜய் படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்காமல் ஏதாவது நடந்திருக்கலாம் என்கிறார்கள் கோலிவுட்டில்.