பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வ, வருண் மற்றும் பலர் நடித்த படம் ‘சில சமயங்களில்’.
இந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்டு சில வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், அவார்டு படம் போன்று உருவானதால் இப்படத்தை வாங்கி வெளியிட யாரும் முன்வரவில்லை. அதனால் படத்தை நேரடியாக டிஜிட்டல் முறையில் வெளியிட முடிவு செய்தார்கள்.
அந்த விதத்தில் இந்தப் படத்தை நெட் பிளிக்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. ஒரு தமிழ்ப் படம் தியேட்டரில் திரையிடாமல் நேரடியாக டிஜிட்டல் முறையில் வெளியிடுவது இதுவே முதல் முறை.
இதற்கு முன் சேரன் இயக்கத்தில் உருவான ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் சி2எச் முறையில் நேரடியாக சிடி மூலம் மக்களிடம் வெளியிடப்பட்டது.
‘சில சமயங்களில்’ படம் போலவே இன்னும் தியேட்டருக்கு வராத படங்களை நெட் பிளிக்ஸ் வாங்கி வெளியிட்டால் அப்படி முடங்கிப் போயிருக்கும் படங்களுக்கு விடிவு காலம் கிடைக்கும்.