தமிழக சட்டசபையில் நேற்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. இதில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய முதல்–அமைச்சர் ஜெயலலிதா 67 அறிவிப்புகளை வெளியிட்டார்.
“காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகியவற்றில் காலி பணியிடங்களை தாமதமின்றி நிரப்புவது அத்தியாவசியமான தேவை என்பதை கருத்தில் கொண்டு, காவலர், சிறை காவலர், தீயணைப்பு பணியாளர், சப்–இன்ஸ்பெக்டர் பதவிகளில் ஏற்படும் காலி இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இனி ஆண்டுதோறும் நிரப்பப்படும். இந்த ஆண்டு 17,138 காவலர்கள், 1,091 சப்–இன்ஸ்பெக்டர்கள், 1,005 தீயணைப்பு பணியாளர்கள் மற்றும் 292 சிறைக்காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ரூ.575 கோடி செலவில் காவல் துறையினருக்கு 4,800 புதிய குடியிருப்புகள் கட்டப்படும். டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 தேர்வு மூலம் 30 போலீஸ் டி.எஸ்.பி.க்கள் நியமிக்கப்படுவார்கள்.”
இவை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புக்களை முதல்வர் வெளியிட்டார்.