நஸ்ரியா நசீம், தமிழ் சினிமாவுக்கு ‘நேரம்’ படம் மூலம் அறிமுகமாகியுள்ள கேரளத்து பைங்கிளி.
இவர் வந்த நேரம் நல்ல நேரம்தான், தற்போது தமிழில் மூன்று படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். தனுஷுடன் ‘நய்யாண்டி’, ஜெய்யுடன் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ‘ராஜாராணி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பாந்தமான, வசீகரமான முகம், நம் இயக்குனர்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பிடித்து விடும். நாம் ஏற்கெனவே ‘நேரம்’ விமர்சனத்தில் சொன்னது போல அடுத்த நதியாவாக வருவதற்கும் வாய்ப்புண்டு.
‘திருமணம் என்னும் நிக்காஹ்’ தான் இவர் அறிமுகமாகும் முதல் படம், ஆனால் அதற்கு முன்னதாக ‘நேரம்’ வந்து விட்டது. இருப்பினும் முதல் படத்தைப் பற்றி ரொம்பவே மகிழ்ச்சியுடன் பேசுகிறார்.
என்னை நானே எவ்வளவு பாராட்டினாலும் தகும், TEN OUT OF TEN மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்றார், TEN மீது ஏன் இவ்வளவு பாசம் என்ற கேள்விக்கு, TEN என்றால் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தின் ஆங்கிலச் சுருக்கத்தின் செல்லப் பெயராம்.
மிக வித்தியாசமான கதை , நேர்த்தியான படமாக்கப்படும் விதம் ,மெய் மறக்க செய்யும் இசை , காட்சிக்காக செலவழிக்க தயங்காத தயாரிப்பு நிறுவனம் ,அழகான அரங்கமைப்பு , மற்றும் எனது உடை அலங்காரம் என எல்லாமே இப்படத்தின் மேல் எனக்கு உள்ள காதலை அதிகரிக்க செய்கிறது .
அதிலும் தற்போது ஹைதராபாத்தில் நடந்துக் கொண்டிருக்கும் இந்த ரயில் சந்திப்பு , ரயில் சம்பத்தப்பட்ட காட்சிகள் முற்றிலும் புதிது , யதார்த்தமானதும் கூட.
கதாநாயகன் ஜெய் இந்த படத்தின் நகை சுவை கலந்த காதல் வசனங்களை எனக்கு விவரித்துக் கூறி உதவுகிறார் . மேலும் , ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்திருக்கும் இயக்குனர் நடிகர் பாண்டியராஜன் எங்களை இடை விடாமல் சிரிக்க வைத்து கொண்டு இருக்கிறார் . ஒரு நடிகையாக மட்டுமின்றி ஒரு ரசிகையாகவும் இந்த படத்தை நான் மிகவும் எதிர்பார்க்கின்றேன்’ என்று கூறுகிறார் நஸ்ரியா நசீம்.