அட்லி யாரென்பது சினிமா ரசிகர்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு, திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ படத்தின் இயக்குனர்தான் இவர்.
படம் நன்றாக ஓடி வருவதால் பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்து இயக்குனர் அட்லி, ஆர்யா, ஜிவி பிரகாஷ்குமார், டி.முத்துராஜ்(கலை இயக்குனர்), ரூபன் (படத்தொகுப்பாளர்) சண்முகம் (தயாரிப்பாளர்) ஆகியோர் நன்றி சொன்னார்கள்.
அப்போது நன்றி தெரிவித்து பேசிய அட்லி ‘நம்பும்படியான’ அட்டகாசமான கதை ஒன்றை சொன்னார்.
“படம் வெளியான அன்று சென்னை, சத்யம் தியேட்டருக்குச் சென்றிருந்தேன். அப்போது, ஒரு கணவன் , மனைவி என்னிடம் வந்து ஒரு நிமிடம் பேச வேண்டும் என்று சொன்னார்கள்.
அப்போது கணவர், “என் மனைவி நிறைமாத கர்ப்பிணி. இன்றுதான் (படம் வெளியான 27ம் தேதி) எனது மனைவிக்கு பிரசவ நாள். நேற்றே மருத்துவமனையில் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், சேர்ந்து விட்டால் 10 நாள் கழித்துதான் இந்த படத்தைப் பார்க்க முடியும்.
எனவே, டாக்டரிடம் பொய் சொல்லி விட்டு இன்று வந்து படத்தைப் பார்த்தோம், ” என்றார்கள்.
எனக்கு அப்படியே நெகிழ்ச்சியாக இருந்தது. இதுக்கெல்லாம் காரணம் பத்திரிகையாளர்களாகிய நீங்கதான். இந்த படத்தை பத்தி மக்கள் கிட்ட சரியா கொண்டு போய் சேர்த்திருக்கீங், உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி ,” என்றார் இயக்குனர் அட்லி.
‘ராஜா ராணி’ என்ற ஒரு படத்திலேயே இரு விதமான காதல் கதைகளைச் சொன்ன அட்லியின் இந்த தியேட்டர் கதையைக் கேட்டு பத்திரிகையாளர்கள் ‘அப்படியே ஷாக் ஆகிட்டாங்க’….