திரிலோக் புரொடக்ஷன்ஸ் சார்பில் திரிலோக் சுரேந்திரன் பிள்ளை பந்தலம் தமிழில் முதல் முறையாக தயாரித்துள்ள படம் ‘சூறையாடல்.’
தாமரை கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் புதுமுக நடிகர் ஸ்ரீபாலாஜி, காயத்ரி, லீமா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மிதுனேஷ்வர் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
படத்தில் நாயகன் ஸ்ரீபாலாஜிக்கு சீரியசான ஒரு கதாபாத்திரமாம். படத்தில் எப்போதுமே ‘உர்’ என்று இருக்கும் ஒரு கதாபாத்திரம். இதனால், படப்பிடிப்பில் ஹீரோவை சிரிக்கவே கூடாது என்று மிரட்டியிருக்கிறார் இயக்குனர் தாமரை கண்ணன்.
இது பற்றி விழாவில் பேசிய ஹீரோ ஸ்ரீபாலாஜி, “படத்தில் என் கேரக்டர் ஒரு மாதிரியான குழப்பமான மனநிலையில் இருப்பவன். படப்பிடிப்பில் இயக்குநர் நான் சிரித்தால்கூட அடிப்பேன் உதைப்பேன் என்று மிரட்டினார். அந்த அளவுக்கு மூடு மாறாமல் வைத்திருந்தார். என்னை இயக்குநர் படம் முடியும் வரை அந்த அளவுக்கு சீரியசாக மாற்றியிருந்தார்.” என்றார்.
புதுமுகம் நடித்த படம் என்றாலும் இசை விழாவிற்கு வந்து சிறப்பித்தார் நடிகர் விஜய் சேதுபதி.
அவர் பேசும் போது, “ ”ஹீரோ ஸ்ரீபாலாஜி என்னோட தம்பி மாதிரி. அவன் ஜெயிப்பதற்காக பல வருடங்களாக சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறான். கூத்துப்பட்டறைக்கு சென்று நடிப்பெல்லாம் கற்றுக்கொண்டு வந்தான். அவனை இந்தப் படத்தில் ஹீரோவாகப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது. இந்த புதிய படக்குழுவினரை வாழ்த்துகிறேன்”. என்றார்.
ஆடியோவை ‘குசேலன்’ படத்தயாரிப்பாளர் ‘செவன் ஆர்ட்ஸ்’ விஜயகுமார் வெளியிட நடிகர் விஜயசேதுபதி பெற்றுக் கொண்டார்.
விழாவில் படக் குழுவினர் உட்பட பலர் வாழ்த்திப் பேசினர்.
