ரசிகர்கள் அன்பு போதும்... - இளையராஜா

26 Mar 2014

film journalists with ilaiyaraja

இசையமைப்பாளர் இளையராஜா , 1000 படங்களைக் கடந்து சாதனை புரிந்ததற்காகவும், உலக அளவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதற்காகவும், திரைப்பட பத்திரிகையாளர்கள் அவரைச் சந்தித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதோடு, அவருக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் மரியாதை செய்தனர்.

பத்திரிகையாளர்கள் தன்னை வந்து சந்தித்ததை மிகவும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட இளையராஜா அதே உற்சாகத்துடன் சில கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

“பொதுவா, பத்திரிகையாளர்களை நாங்கதான் சந்திக்கிறது வழக்கம். நீங்களா வந்து என்னை சந்திக்கிறது வந்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியா இருக்கு. ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

எந்த ஒரு தேர்வு, விருது அதைப் பத்தியெல்லாம் எனக்கொரு அபிப்பிராயமே கிடையாது. இந்த உலகத்துலயே உயர்ந்த விருதா இருக்கட்டும், உயர்ந்த விருதுன்னு நீங்க கருதுறதா இருக்கட்டும், எனக்கு அது உயர்ந்ததே இல்லை.

ஏன்னா, ஒரு கிரியேட்டருக்கு வந்து, இந்த அவார்டு எந்த விதத்துலயும் உற்சாகப்படுத்தறதுலயோ, அல்லது பெரிய அங்கீகாரம் கிடைக்கிறதோ கிடையாது. ஏன்னா, இசை வந்து அந்த மாதிரியானது. அதுல முழுமையா ஈடுபட்டவனுக்கு எந்த அவார்டு பத்தியும் கவலையே இருக்காது. அது எனக்கு இருக்குன்னு நினைக்கிறேன். நான் அதுல முழுமையா ஈடுபட்டிருக்கேன், நான் செய்யற வேலைகள்ல இருக்கிற குறைகள் எனக்கு தெரியறதால என்னோட வேலையை பத்தி நான் நிறைய நினைக்கிறதில்லை.

நான் என்னைக்கு என்னென்ன பண்றனோ அதெல்லாம் அப்படி அப்படியே ஆணியடிச்ச மாதிரியான விஷயங்களா இருக்கு.

எட்ட முடியாத உயரத்துல நான் இருக்கன்னு நீங்கதான் நினைக்கறீங்க, ஆனால், நான் அதை ஒரு பொருட்டாவே நினைக்கலை. அதை, நான் என் வாழ்க்கையை ஓட்டிட்டு போறததான் நினைக்கிறேனே தவிர, இதை ஒரு சாதனையாவோ, இந்த இடத்துல இருக்கிதையோ, பெரிய விஷயமாவோ நினைக்கிறதில்லை.

அதைப் பத்தி நினைச்சிட்டிருந்தால் தலைதான் பெருசாகும்.  தன்னைப் பத்திதான் தம்பட்டம் அடிக்கணும். தன்னைப் பத்திதான் எழுதணும்னு சொல்லி பத்திரிகையாளர்கள் கிட்ட கேன்வாஸ் பண்ணணும். அந்த மாதிரியெல்லாம் எனக்குக் கிடையாது.

ilaiyaraja and s4s editorநீங்கள்லாம் என்னை தேடி வர்றீங்கன்னா, அதுக்குக் காரணம் என்னுடைய சுத்தம், இசையினுடைய சுத்தம் , என் மேல உங்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி உங்களை இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கு. நாம இங்க சந்திக்கறம்னா, இந்த சந்திப்பு நிகழ்வதற்கு எவ்வளவோ பின்னணி காரணமிருக்கு.

எவனோ ஒருத்தன்  செலக்ட் பண்ணாங்கறதுக்காகவா நீங்க இங்க வர்றீங்க. அதுக்குப் பின்னாடி உங்க அன்பு இருக்கு, உங்க ஈடுபாடு இருக்கு. அதுக்கு என்ன விலை கொடுக்கிறது, அதுக்கு விலையா இருக்கு.

சினிமாவுல சாதிச்சிட்டோம்னு நான் நினைக்கிறதேயில்லை. என்கிட்ட வேலை வாங்கிறதுக்கு ஆளே இல்லை. வேலை வாங்கிட்டோம்னு நினைச்சாங்கன்னா அது அவங்களுக்கு அன்னைக்குக் கிடைச்ச சாப்பாடு.  வந்தீங்களா , உனக்கு இந்த நேரத்துல இட்லிதான் இருக்கு, பொங்கல்தான் இருக்கு, இல்லை பழைய சோறுதான் இருக்கு. அது அன்னைக்கு அவங்களுக்கு கிடைச்சது. அது பாக்கியமா இல்லை பாவமான்னு தெரியாது. அதை வச்சி என்னை லெவல் பண்ண முடியாது. இவருக்கு இதுதான் தெரியும், அதுதான் தெரியும்னு இன்னொரு ஆள் என்னை கணக்கு போட முடியாது.

இன்றைய தலைமுறையினரும் என் இசையை ரசிக்கிறாங்கன்னா, நான் சின்ன வயசுல என்ன ஃபயரோட சென்னைக்கு வந்தன்னா, அந்த ஃபயர் இன்னும் அப்படியேதான் இருக்கு , நானும் இளையவனாதான் இருக்கேன், ” என தெரிவித்தார்.

எண்ணற்ற திரைப்பட பத்திரிகையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share via: