எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் – பி.மதன், ஏஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘மான் கராத்தே’ படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.
அறிமுக இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு உலகம் முழுவதும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த், அஜித், விஜய் படங்களுக்கு மட்டுமே உலக அளவில் பெரும் வரவேற்பு இருப்பது வழக்கம். சிவகார்த்திகேயன் இற்கு முன் நடித்து வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மாபெரும் வெற்றி பெற்றதால் ‘மான் கராத்தே’ படத்தை பலரும் வாங்கி வெளியிட முன் வந்திருக்கின்றனர்.
இதனால் ‘மான் கராத்தே’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 4ம் தேதி 675 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரையரங்குகளில் வெளியான எண்ணிக்கையை விட சுமார் 200 திரையரங்குகள் அதிகம்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ தமிழ்நாட்டில் 280 திரையரங்குகளிலும், வெளிநாட்டில் 120, கர்நாடகா 45, கேரளா 32, வட இந்தியாவில் 15, என மொத்தமாக 492 திரையங்குகளில் வெளியானது.
தற்போது, ‘மான் கராத்தே’ படம் தமிழ்நாட்டில் 345 திரையரங்குகளிலும், வெளிநாட்டில் 180, கர்நாடகா 60, கேரளா 55, வட இந்தியாவில் 35, என மொத்தமாக 675 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
குறுகிய காலத்திலேயே சிவகார்த்திகேயன் நடித்த படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருப்பதை திரையுலக வட்டாரங்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன.