2013ம் ஆண்டிற்கான 61வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
தமிழ்த் திரையுலகிற்கு மொத்தம் 5 விருதுகள் கிடைத்துள்ளன…
சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுத் திரைப்படம் – தலைமுறைகள்
சிறந்த பிராந்திய மொழித் திரைப்படம் – தமிழ் – தங்க மீன்கள்
சிறந்த பாடலாசிரியர் – நா. முத்துக்குமார் (தங்க மீன்கள்)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – சிறுமி சாதனா ( தங்க மீன்கள்)
சிறந்த படத்தொகுப்பாளர் – சாபு ஜோசப் (வல்லினம்)
இதில் ‘தலைமுறைகள்’ படத்தைத் தயாரித்த சசிகுமார், இரண்டாவது முறையாக தயாரிப்பாளராக தேசிய விருது பெறுகிறார். இதற்கு முன் அவர் தயாரித்த ‘பசங்க’ திரைப்படம் அவருக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
இது குறித்து சசிகுமார் கூறுகையில்,
“தலைமுறை’ படத்தைத நான் படமாகப் பார்க்கவில்லை. ஒரு பதிவாகத்தான் பார்க்கிறேன். பாலுமகேந்திரா உயிருடன் இருந்திருந்தால், இந்த மகிழ்ச்சி இன்னும் இரண்டு மடங்காக இருந்திருக்கும். இந்த விருது பாலுமகேந்திராவுக்கான விருது. அவருடன் பணிபுரிந்த பாலுமகேந்திரா திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
சிறந்த பிராந்திய திரைப்படமாக தமிழில் தேர்வு செய்யப்பட்டுள்ள ‘தங்க மீன்கள்’ படத்தின் இயக்குனர் ராம் கூறுகையில்,
“இந்த விருதை தந்தை – மகள் உறவு மற்றும் பாசத்துக்கான அங்கீகாரமாக கருதுகிறேன். கல்வி முறையை எடுத்து சொன்னதற்காக கிடைத்த விருது இது. மக்களாலும், விருதுகளாலும் ‘தங்க மீன்கள்’ கொண்டாடப்படுவது மகிழ்ச்சி.
தம்பி நா.முத்துக்குமாருக்கு என் படத்தின் மூலம் விருது கிடைத்திருப்பது இன்னும் சந்தோஷத்தை அளிக்கிறது. சிறுமி சாதனாவுக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கிடைத்திருப்பது , குழந்தைகளையும் மகிழ்ச்சிப்படுத்தியதைப் பார்த்து நானும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.
‘தங்க மீன்கள்’ படத்தில் இடம் பெற்ற பாடலான ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்….’ பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை முதல் முறையாகப் பெற்ற நா.முத்துக்குமார் கூறியதாவது,
“தமிழ்ப் பட உலகில் தாய் – மகள் பாசத்தை மையமாக வைத்து நிறைய படங்கள் வந்துள்ளன. ஆனால், தந்தை – மகள் பாசத்தை மையமாக வைத்து வந்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் ‘தங்க மீன்கள்’ படம் மிகவும் முக்கியவத்தும் வாய்ந்தது.
இந்த படத்தில் பாடல் எழுத எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, கௌதம் மேனன் பாடலைப் பாடிய ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விருதை ‘தங்க மீன்கள்’ படத்திற்கு கதை எழுதிய இயக்குனர் ராம் மகளான ஸ்ரீசங்கர கோமதிக்கும், என் மகன் ஆதவன் நாகராஜனுக்கும் சமர்ப்பிக்கிறேன்,” என்றார்.
‘தங்க மீன்கள்’ படத்தை உலகம் முழுவதும் வெளியிட்ட ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் பேசும் போது, “தங்க மீன்கள்’ படத்தைத் தயாரித்ததற்காக பெருமைப்படுகிறேன். இந்த விருது, மேலும் இது போன்ற தரமான படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை எனக்கு அளிக்கிறது,” என்றார்.
‘தங்க மீன்கள்’ படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதை வென்ற சிறுமி சாதனா கூறும் போது,
“இந்த அற்புதமான பயணத்தை நான் என்றுமே மறக்க மாட்டேன். தேசிய விருது பெறக் காரணமாக இருந்த இயக்குனர் ராம் அப்பா, கௌதம் மேனன் அங்கிள், ஜேஎஸ்கே அங்கிள், ஆகியோருக்கு எனது நன்றி. நா.முத்துக்குமார் அங்கிள், யுவன் அங்கிள், அர்பிந்து சாரா அங்கிள் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்,” என்றார்.
‘வல்லினம்’ படத்திற்காக சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருதைப் பெற்ற சாபு ஜோசப் கூறியதாவது, “வல்லினம்’ படத்திற்காக மூன்று வருடங்களாக உழைத்தேன்.
அதற்கான பரிசாக இந்த விருதை எடுத்துக் கொள்கிறேன். படத்தில் எனக்கு பணிபுரிய வாய்ப்பு கொடுத்த இயக்குனர் அறிவழகன், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘வல்லினம்’ படத்தில் பணிபுரிவதற்காக என்னைத் தேடி வந்த பல வாய்ப்புகளை தவிர்த்தேன். இப்போது நிறைய படங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை ‘வல்லினம்’ படம் ஏற்படுத்தித் தந்துள்ளது,” என்றார்.
“தங்க மீன்கள், தலைமுறைகள்,” போன்ற படங்கள் தமிழ் சினிமாவை தலை நிமிர வைக்கும் படைப்புக்களாகப் படைத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், மற்ற அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேசிய விருதுகளை வென்ற அனைவருக்கும் நமது இணையதளம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
