‘எம்ஜிஆர்’ படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியீடு

காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை ‘காமராஜ்’என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தற்போது எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றினை மாபெரும் பொருட்செலவில் ‘எம்ஜிஆர்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது .

இத்திரைப்படத்தில் எம்.ஜி .ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப் பட நாயகன் சதிஷ் குமார் எம். ஜி. ஆர் வேடத்தில் நடிக்கிறார். எம். ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையாராக ரித்விகாவும், M .R . ராதாவாக பாலாசிங், இயக்குநர் பந்துலுவாக Y .G மகேந்திரன், எம். ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடகக் கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

எம்.ஜி.ஆர் அவரது திரைப்படங்களில் கதைக்கும், அவரது கதாபாத்திரங்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போன்றே படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அதனால்தான் அவரது பாடல்கள் இன்றும் சாகாவரம் பெற்று மக்களின் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அது போன்றே இத்திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களும் இருக்க வேண்டும் என்பதால் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்களான கவிஞர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், மற்றும் கவிஞர் பூவை செங்குட்டுவன் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு பெரும்பாலான பாடல்களை எழுதியுள்ளனர். இப்படத்திற்கு ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைக்கிறார்கள்..

அடுத்த வாரம் இத்திரைப்படத்தின் ‘டீசரை’ வெளியிட உள்ளதாக ‘எம். ஜி. ஆர்’ திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் அ. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். .

சென்ற ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்பினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

மோகினி, அறிவியல் – ஹாரர் படம்

Read Next

வீடு, பணம் மட்டுமே மகிழ்ச்சி அல்ல – சூர்யா