சமூக வலைத்தளங்களான ”ஃபேஸ்புக், ட்விட்டர்” ஆகியவற்றில் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் ஒருவர் மாற்றி மற்றொருவர் கமெண்ட் அடித்துள் கொள்வது ரொம்ப நாட்களாகவே இருந்து வருகிறது.
இதற்காகவே தனித் தனி பக்கங்களைக் கூட உருவாக்கி அவற்றில் கண்டபடி திட்டிக் கொள்கிறார்கள். இது பற்றி சம்பந்தப்பட்ட நடிகர்களான விஜய், அஜித் ஆகியோருக்குத் தெரியுமா என்பது தெரியாது ?
அவை ஒரு வரைமுறையுடன் இருந்தால் கூடப் பரவாயில்லை. சில சமயங்களில் எல்லை தாண்டி என்னென்னமோ எழுதும் அளவிற்குப் பரவியிருக்கிறது. இந்த மோதல் தற்போது அடுத்த கட்டத்தை அடைந்திருக்கிறது.
மொபைல் யுகம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் ‘ஆன்ட்ராய்டு’ போன்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள சில வீடியோ கேம்களை விஜய்க்கு எதிராக சிலர் உருவாக்கியுள்ளனர். இதுவரை எந்த ஒரு நடிகருக்காவது இப்படி ஒரு விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை
விஜய்யை கிண்டல் செய்யும் விதமாக இரண்டு விளையாட்டுக்கள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளன. ஒரு விளையாட்டின் பெயர் ‘விழுப்புரம் ரன்”, மற்றொரு விளையாட்டின் பெயர் “ஃபிளாப்பி விஜய்’. இந்த இரண்டு விளையாட்டுக்களும் அதிக அளவிற்கு ‘டவுன்லோடு’ செய்யப்பட்டுள்ளதாம்.
விளையாட்டின் இடையே விஜய் பட வசனங்களும் இடம் பெற்றுள்ளது. விஜய் ரசிகர்கள் யாராவது இந்த விளையாட்டைப் பார்த்தால் கண்டிப்பாக கோபப்படுவார்கள். அந்த அளவிற்கு ‘விழுப்புரம் ரன்’ விளையாட்டு அமைந்துள்ளது.
