தமிழில் வெகு நாட்களுக்குப் பிறகு புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் அஞ்சலி.
பல வெற்றிப் படங்களைக் கொடுத்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தைத் தயாரிக்கிறது. ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்ற படு தோல்விப் படத்தை இயக்கிய சுராஜ் இந்த படத்தை இயக்குகிறார்.
ஜெயம் ரவி நாயகனாக நடிக்க, இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அஞ்சலி நடிக்கிறார். மற்றொரு கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடைபெற்ற பூஜையில் அஞ்சலி கலந்து கொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
“பல மாதங்களுக்குப் பிறகு தமிழில் இந்தப் படம் மூலம் நடிக்க வந்துள்ளேன். இயக்குனர் சுராஜ் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படம் எனக்கு ஒரு நல்ல ரீ-எண்ட்ரியாக இருக்கும் என நம்புகிறேன். இது ஒரு முழு நீள காமெடி படம். முதல் முறையாக முழு நீள காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
எனக்கு தமிழ்த் திரையுலகில் நடிக்க யாரும் தடை போடவில்லை. தடை போட்டிருந்தால், நான் எப்படி இந்த படத்தில் நடிக்க முடியும்.
நான் யாரையும் கல்யாணம் பண்ணவில்லை. எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதாக வதந்திகள் பரவி வருகிறது. எப்போது எனக்கு கல்யாணமானது என்று எனக்கே தெரியவில்லை. எனக்கு நண்பர்கள், சினிமா துறையினர் பலர் துணையாக இருக்கின்றனர். தமிழில் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
களஞ்சியம் இயக்கும் படம் குறித்து இப்போது நான் எதுவுமே பேச முடியாது. இப்பிரச்சனை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது,” என்றார்.
தனக்கிருந்த எதிர்ப்புகளையும் மீறி அஞ்சலி இன்று படப்பிடிப்பில் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சயரியப்படுத்தியுள்ளது.