தனுஷ், அமலா பால் மற்றும் பலர் நடித்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகியிருப்பவர் அமிதாஷ்.
பார்ப்பதற்கு இந்திப் பட ஹீரோ மாதிரி இருக்கிறார், இவர் எப்படி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார் என்பது ஆச்சரியமான ஒன்றுதான். இசையமைப்பாளர் அனிருத்தின் பள்ளிக் கால நண்பராம் அமிதாஷ். சினிமாவில் நாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்தி நடிகர் அனுபம் கேர் நடத்தும் நடிப்புப் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று ஒரு நடிகருக்கான முழு தகுதியையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
எப்படி இந்த ‘விஐபி வில்லன்’ வாய்ப்பு என்று கேட்ட போது, படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.
“எனக்கு சொந்த ஊர் கர்நாடக மாநிலம்னாலும், நான் பிறந்து, வளர்ந்தது, படிச்சது எல்லாமே சென்னையிலதான். அனிருத்தோட சின்ன வயசுல இருந்தே நெருங்கிய நண்பன். அவர் தங்கை கல்யாணத்துக்கு நான் ஓடியாடி வேலை செஞ்சதை தனுஷ் கவனிச்சிருக்காரு. அப்ப கிடைச்ச அறிமுகத்துல அனிருத்தும், என்னோட சினிமா ஆசையைப் பத்தி சொன்னாரு. தனுஷும் நான் தயாரிக்கிற படத்துல ஒரு பணக்கார வில்லன் கதாபாத்திரம் இருக்கு. அதுல நடிக்க வைக்கலாம் என்றார். அப்படி கிடைச்சதுதான் இந்த வாய்ப்பு.
ரசிகர்களோட ரசிகர்களா தியேட்டருக்கு போய் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தைப் பார்த்துட்டிருக்கேன். ஆடியன்ஸ் ரொம்ப ரசிக்கிறாங்க. என் டயலாக்குக்கும் எதிர்ப்புக் குரல் கொடுக்கறாங்க. அதையெல்லாம் என் நடிப்புக்குக் கிடைச்ச வெற்றியா கருதறேன். இந்த நேரத்துல தனுஷையும், இயக்குனர் வேல்ராஜுக்கும் நன்றி சொல்ல ஆசைப்படறேன், ” என்றார்.
இப்போதைக்கு எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருக்கும் அமிதாஷ், ஒரு நாள் முழு ஹீரோவாக வளர்ந்து நிற்பேன் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.