ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம் மற்றும் பலர் நடிக்கப் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு சில தினங்களுக்கு முன் ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வெகு விமரிசையாக நடைபெற்றது.
இப்படத்தின் டீசரும் அன்றே வெளியிடப்பட்டு யு டியூபில் மட்டும் இரண்டே நாட்களில் இதுவரை 31 லட்சம் பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது. இதுவும் ஒரு புதிய சாதனைதான். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய படங்களின் சாதனையை இந்த ‘ஐ’ டீசர் கண்டிப்பாக முறியடித்துவிடும்.
‘கோச்சடையான்’ படத்தின் டீசரை கடந்த ஒரு வருடத்தில் யு டியூபில் இதுவரை பார்த்த மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 48,16,763. ‘ஐ’ டீசரை இரண்டே நாட்களில் 31,79, 729 பேர் பார்த்துள்ளனர். ‘கோச்சடையான்’ டீசரின் பார்வையாளர்களின் எண்ணிக்கைய ‘ஐ’ திரைப்படம் இன்னும் சில நாட்களிலேயே கடந்து புதிய சாதனையைப் படைத்து விடும்.
‘ஐ’ படத்தின் இசை வெளியீடு நடந்து விட்டாலும், எமி ஜாக்சன் நடிக்க வேண்டிய ஒரு பாடல் மட்டும் இன்னும் படமாக்கப்படாமலேயே இருந்தது. அதற்காக பல மாதங்களாக சென்னை, பிரசாத் ஸ்டுடியோவில் பல கோடி ரூபாய் செலவில் ஒரு பிரம்மாண்டமாக அரங்கமும் அமைக்கப்பட்டது. சிலபல பிரச்சனைகள் காரணமாக அந்த பாடல் காட்சி எடுக்கப்படாமலேயே இருந்தது. இசை வெளியீட்டுக்குப் பின் அந்தப் பாடல் காட்சியை படமாக்க உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் அந்தப் பாடல் காட்சியின் படப்பிடிப்பு சில மணி நேரங்களுக்கு முன் ஆரம்பமாமகியுள்ளது. எமி ஜாக்சன் அசத்தலான ஆடையுடன் அந்தப் பாடல் காட்சியில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்தப் பாடல் காட்சியுடன் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.