தெலுங்குத் திரையுலகில் கடந்த பல வருடங்களாகவே நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரம்மானந்தம்.
80களின் இறுதியில் நடிகராக தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தவர் அதன் பின் நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து அதை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
தெலுங்கில் எண்ணற்ற படங்களில் நடித்தாலும் தமிழில் ‘கில்லி’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்து இங்கும் அறிமுகமானார். அதன் பின் வெளிவந்த ‘மொழி’ திரைப்படமும் அவருக்குத் தமிழில் நல்ல பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து அவ்வப்போது தமிழ்ப் படங்களில் நடித்தும் வருகிறார். ‘அஞ்சான்’ படத்திலும் நடித்திருந்தார், ஆனால், படம் வெளியான பின் சில நாட்கள் கழித்து அவர் நடித்த காட்சி தூக்கப்பட்டுவிட்டது.
தற்போது அவர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘லிங்கா’ படத்திலும் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளன. இதுவரை அவர் தமிழில் விஜய், சூர்யா, விஷால் தவிர வேறு எந்த முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும் நடித்ததில்லை. ‘லிங்கா’ படத்தில் நடிப்பதன் மூலம் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்பைப் பெற்றிருக்கிறார். இதனால் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாமும் அவர் சென்று சேர வாய்ப்புள்ளது.
தமிழில் அவருடைய வயதுக்கேற்ற நகைச்சுவை நடிகர்களில் தற்போது தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர் போன்ற ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள். ‘லிங்கா’ படத்தில் நடித்து புகழ் பெறுவதன் மூலம் தமிழிலும் அவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரலாம்.