டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ஒரு நிகழ்வையோ, திரைப்படங்களையோ, அரசியல் செய்திகளையோ கிண்டலடிப்பது தற்போது சர்வ சாதாரணமாகி விட்டது.
வெறும் கிண்டலுடன் நிறுத்திக் கொள்ளாமல், அதை திரைப்படங்களின் காட்சிகளிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வைத்து, அதில் ‘கேலிச் சித்திரம்’ போன்ற கமெண்ட்டுகளை போட்டு கார்ட்டூன் வடிவில் வெளியிட்டு வருகிறார்கள். ‘மீமீ’ என்றழைக்கப்படும் அவை இணையதள பயன்பாட்டாளர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் வெளிவந்த ‘அஞ்சான்’ திரைப்படத்தில் இந்த ‘மீமீ’ கார்ட்டூன்கள் அளவுக்கதிகமாக வெளியிடப்பட்டன. இயக்குனர் லிங்குசாமியையும், சூர்யாவையும் பல்வேறு விதமாக கிண்டலடித்து பல ‘மீமீ’க்கள் வெளியிடப்பட்டன. நகைச்சுவை உணர்வுடன் அவை வெளியிடப்பட்டாலும் சில வரம்பு மீறி இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
லிங்குசாமிக்காக பரிந்து பேசிய இயக்குனர் வெங்கட் பிரபுவையும் ‘மீமீ’ கிரியேட்டர்கள் விடவில்லை, தானாக வந்து சிக்கிக் கொண்ட வெங்கட் பிரபுவை சரமாரியாக கிண்டலடித்து விட்டனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களாக ‘கத்தி’ படத்தைப் பற்றி ‘மீமீ’ கிரியேட்டர்கள் பல ‘மீமீ’க்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர். ‘கத்தி’ படத்திற்கு இதுவரை ஒரே ஒரு டீசர் மட்டுமே வெளியிடப்பட்டது. இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் படத்தின் எந்த டிரைலரும் வெளியிடப்படவில்லை. விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்து ஏமாந்து வருகிறார்கள்.
அவர்கள் ஆவலைப் போக்கும் வகையில் இன்னம் சிறிது நேரத்தில் ‘கத்தி’ படத்தின் புதிய டீசர் வெளியிட இருக்கிறார்கள்.
இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த ‘மீமீ’க்களின் அட்டகாசத்தைத் தாங்கவே முடியாது. ‘அஞ்சான்’ படத்திற்கு அடுத்து அவர்கள் பார்வை தற்போது ‘கத்தி’ படத்திற்குத் திரும்பியுள்ளது.
பார்ப்போம்…‘கத்தி’ யார் பக்கம் திரும்பப் போகிறதென்று….
