விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் சுந்தர் .சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா, வைபவ், சந்தானம், சதிஷ், மதுரிமா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், துளசி, கௌதம் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஆம்பள’ படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது.
‘நான்’ படத்தில் இடம் பெற்ற ‘தப்பெல்லாம் தப்பேயில்லை…’, ‘எதிர் நீச்சல்’ படத்தில் இடம் பெற்ற ‘எதிர் நீச்சலடி..’, ‘வணக்கம் சென்னை’ படத்தில் இடம் பெற்ற ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்…’, ‘கத்தி’ படத்தில் இடம் பெற்ற ‘பக்கம் வந்து கொஞ்சம்…’ ஆகிய ஹிட் பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகரான ‘ஹிப் ஹாப் தமிழா’ இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகிறார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, இன்று காலை சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர்அன்புச் செழியன் ஆகியோர் பாடல்களை வெளியிட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்யா இருவரும் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் விஷால் பேசியதாவது,
“முதலில் தலைப்புப் பற்றி ஒரு பயம் வந்தது. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது எனக்கு இன்னொரு பயமும் இருந்தது. ஏற்கெனவே சுந்தர்சியுடன் இணைந்து நடித்த ‘மத கஜ ராஜா’ படம் இன்னமும் வெளி வரவில்லை. சினிமாவில் செண்டிமெண்ட் அதிகம், அதனால் பலரும் கேட்டார்கள். ஏற்கெனவே இப்படி இருக்கும் போது மறுபடியும் சுந்தர் சியுடனா படம் பண்ணப்போறே? என்று கேட்டார்கள். இருந்தாலும் நான் தெளிவாக, ஒரே முடிவாக இருந்தேன். இந்த ‘ஆம்பள’ லைன் முன்பே சொல்லப்பட்டதுதான். சுந்தர்.சிக்கும் எனக்குமான நல்லுறவு நன்றாக இருக்கிறது, அது ஒரு சொத்து போன்றது.
செப்டம்பர் 20ல் தொடங்கிய படம் டிசம்பர் 26ல் தயாராகி விட்டது. மூன்றே மாதத்தில் முழுப்படமும் முடித்தோம் எல்லாரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கினோம். பலரும் எனக்காக கஷ்டப்பட்டு உழைத்தார்கள்.
நெருக்கடியில் பதற்றத்துடன் டென்ஷனுடன் உழைத்திருக்கிறார்கள். இப்படி சிரமப்படுத்தி கஷ்டப் படுத்துவது இது கடைசிப் படமாக இருக்கட்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இனியும் ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு இப்படிச் செய்வது நல்லதல்ல. ஆனாலும் சுந்தர்.சி சார் சீக்கிரம் முடித்தாலும் தரமாகவும் முடித்திருக்கிறார் .
படம் முடிந்துதான் விடுமுறைப் பயணம் போவார்கள். இந்தப் படமே ஜாலியான ஹாலிடே அனுபவமாக இருந்தது. டைரக்டர் அந்த அளவுக்கு டென்ஷன் இல்லாமல் எடுத்தார்.
இந்தப் படத்துக்கு இசையமைக்க மெட்டுப்போட 2500 ரூபாய்தான் செலவு . ஆர்.ஏ. புரத்தில் தங்கி இதை ஹிப் ஹாப் தமிழா செய்தார். பாங்காக், ஸ்பெயின் எல்லாம் போகவில்லை. பஜ்ஜி, டீ செலவுதான் பெரிய செலவு. இதை வெளியிடும் வி மியூசிக்கில் இதன் 6 பாடல்களும் பெரிய அளவில் வெற்றிபெறும்…
முதன்முதலில் ஹன்சிகா என்னுடன் நடித்து இருக்கிறார். ஹன்சிகா ஜோடி என்றதுமே எனக்குப் பயம். அவர் நல்ல வெள்ளை, நான் அட்ட கறுப்பு. கேமரா மேனுக்கு மிகவும் கஷ்டம் என்று நினைத்தேன். ‘நீ லண்டன் லட்டு, நான் மதுரை புட்டு’ என்று படத்தில் பாட்டே வரும். இருந்தாலும் அவர் சமாளித்து எடுத்தார். சினிமா என் தாய் மாதிரி. அதற்கு யார் கெடுதல் செய்தாலும் விடமாட்டேன், திருட்டு விசிடிக்காக தொடர்ந்து போராடுவேன்,” என்று விஷால் பேசினார்.
நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் சுந்தர் .சி, இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, நடிகர்கள் ஆர்யா, வைபவ், சதிஷ், மன்சூரலிகான், நடிகைகள் ஹன்சிகா, குஷ்பு, இயக்குநர்கள் எஸ்.ஏ. சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி, சுசீந்திரன், திரு, தயாரிப்பாளர்கள் டி.சிவா, ஜி.கே.ரெட்டி, சுபாஷ் சந்திர போஸ், அன்புச்செழியன், முருகராஜ், கே.ஈ ஞானவேல்ராஜா ஆகியோரும் பேசினார்கள்.