இயக்குனர் வசந்தபாலன், தமிழ் சினிமா உலகில் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராகப் பார்க்கப்படுபவர்.
எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாகப் பேசுவதிலும், செய்வதிலும் ரசிகர்களிடத்திலும் நல்ல பெயரைப் பெற்றுள்ளவர்.
சிறந்த படங்களையே கொடுக்க நினைக்கும் இவரைப் போன்ற இயக்குனர்களுக்கு தமிழ் ரசிகர்கள் தரும் பரிசு தோல்வியாக இருந்தாலும் அதைக் கண்டு வருந்தாமல் மேலும் சிறந்த படங்களைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்.
இன்று அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளிப்படையான, சுவாரசியமான பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்…
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
“ஒரு சினிமா இயக்குனராக நான் செய்த அபத்தங்கள்…
1. ஒரு படத்தில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனாலே படம் ஓடிவிடும் என்று நம்பியது
2. திருப்பதிக்கு மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டால் படம் ஓடி விடும் என்று நம்புவது
3. படத்தின் கதை புது கதைக் களமாக இருந்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
4. நமக்கு சுக்ரதிசை ஓடுகிறது அதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
5. ரகுமான் இசையமைத்தாலே படம் ஓடி விடும் என்று நம்புவது
6. கஜ்முர் தர்காவுக்கு போய் வேண்டிக்கொண்டாலே படம் ஓடி விடும் என்று நம்புவது
7. ராமச்சந்திர மிஷன் மாஸ்டர் அனுக் கிரகம் கிடைத்து விட்டாலே படம் ஓடி விடும் என்று நம்புவது
8. இசை வெளியீட்டு விழாவில் அனைவரும் படம் ஓடும் என்று கூறுகின்றனர் என்று நம்புவது
9. படம் பார்த்துவிட்டு ஜெயமோகன் ‘u will win’ என்று குறுஞ்செய்தி அனுப்பினாலே படம் ஓடி விடும் எனறு நம்புவது
10. என் மழலை மாறா குழந்தை அப்பா உங்க படம் ஹிட் என்று சொன்னவுடனே படம் ஓடிவிடும் என்று நம்புவது
11. உதவி இயக்குனர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு சார் ‘அப்போகலிப்டோ’ எடுத்து விட்டீர்கள் என்று சொன்னவுடனே படம் ஓடி விடும் என்று நம்புவது
12. முதல் இரண்டு படங்கள் ஓடி விட்டதாலே அடுத்த படம் ஓடி விடும் என்று நம்புவது
13. கையில் மந்திரித்த பச்சை கயிறு கட்டிக் கொண்டாலே திருஷ்டி போய் படம் ஓடி விடும் என்று நம்புவது
14.‘ன்’ என்று முடியும் என்ற வார்த்தையில் தலைப்பு வைத்தாலே படம் ஓடி விடும் என்று நம்புவது
15. படம் பரபரவென்று ஓடுகிறது, இதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
16. படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் காட்சிகளை ரசிப்பதை வைத்துக் கொண்டே படம் ஓடிவிடும் என்று நம்புவது
17. சபரிமலைக்கு மாலை போட்டாலே படம் ஓடி விடும் என்று நம்புவது
18. தோரணமலை முருகன் கோவிலில் படப்பிடிப்பு எடுத்தாலே படம் ஓடி விடும் என்று நம்புவது
19. ப்ரிவியு படம் பார்த்தவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தாலே படம் ஓடி விடும் என்று நம்புவது
20. சென்சார் அதிகாரிகள் பாராட்டியதற்காக படம் ஓடிவிடும் என்று நம்புவது
இப்படி நிறைய நம்பிக்கைகள் திரையுலகம் முழுக்க சுழன்று வருகின்றன,
ஆனால் வெற்றி மட்டும் யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு மாயக் கனி…” என்று பதிவிட்டுள்ளார் வசந்தபாலன்.
திரையுலகில் வெற்றி என்பது ஒரு புரியாத புதிராக உள்ளது. வெற்றியும், தோல்வியும் மனிதனுக்கு சகஜம் என்பதை விட, சினிமாவில்தான் அதிகம் என்பதே உண்மை…
